குரூப்-4 பணிக்கு தேர்வானவர்களின் பட்டியலை ஜன.8ம் தேதிக்குள் வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!

மதுரை: குரூப்-4 பணிக்கு தேர்வானவர்களின் பட்டியலை ஜனவரி.8ம் தேதிக்குள் வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கண்மணி, கீதா, முத்துலட்சும் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த மனுவில், ”தமிழகத்தில் 7301 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு 2022 மார்ச் மாதம் வெளியானது. அந்தாண்டு ஜூலை 24 ஆம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 18 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். பின்னர் குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில் எங்கள் பெயர் இல்லை. தேர்வில் எங்களுக்கு 255 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் நாங்கள் தேர்வு செய்யப்படவில்லை. குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. குரூப் 4 தேர்வில் மோசடி நடைபெற்றுள்ளது. எனவே எங்களின் விடைத்தாள் ஓ.எம்.ஆர் சீட் வழங்க உத்தரவிட வேண்டும்.

மேலும், எங்களுக்காக பணியிடங்களை காலியாக வைக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. குரூப்-4 விடைத்தாள் திருத்தத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் தேர்ச்சி அடைந்த தங்களை தேர்வு செய்யவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டது. இந்த வழக்கு இன்று ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது, பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி மனுதாரர்களைவிட குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் நீதிமன்றத்தை நாடலாம். ஜனவரி.8க்குள் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை வெளியிட உத்தரவிட்டு ஐகோர்ட் கிளை வழக்கை முடித்து வைத்தது.

The post குரூப்-4 பணிக்கு தேர்வானவர்களின் பட்டியலை ஜன.8ம் தேதிக்குள் வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: