கிருஷ்ணகிரி, டிச.11: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 மையங்களில் நடந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வை 5,826 பேர் எழுதினர்.தமிழ்நாடு முழுவதும் காவல்துறை, தீயணைப்பு துறை, சிறை துறைகளில் காலியாக உள்ள 3,359 பணியிடங்களுக்கு இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வை எழுத 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு 35 மையங்களில் தேர்வு நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கல்லூரி, கோனேரிப்பள்ளி பெருமாள் மணிமேகலை கல்லூரி, ஓசூர் அதியமான் கல்லூரி உள்பட மொத்தம் 5 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுத மொத்தம் 7,521 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 5 ஆயிரத்து 826 பேர் தேர்வு எழுதினர். 1,695 பேர் தேர்வு எழுதவில்லை.
தேர்வு எழுத காலை 8 மணிக்கே தேர்வர்கள் வர தொடங்கினர். அவர்களை காலை 9 மணி முதல் போலீசார் சோதனை செய்து மையங்களுக்குள் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காலை 10 மணிக்கு எழுத்து தேர்வு தொடங்கி மதியம் 12.40 மணி வரையில் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த தேர்வை கிருஷ்ணகிரி மாவட்ட தேர்வு கண்காணிப்பு முதன்மை அதிகாரியும், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனருமான பிரவீன்குமார் அபினவ், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாக்கூர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர்வை முன்னிட்டு 5 மையங்களிலும் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
The post 2ம் நிலை காவலர் தேர்வை 5,826 பேர் தேர்வு எழுதினர் appeared first on Dinakaran.
