எம்எல்ஏக்களின் அதிகாரம் குறைந்துவிடும் என்பதால் ஆர்வம் காட்டாத அரசு புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் ‘நோ’: 55 ஆண்டு வரலாற்றில் 2 முறை மட்டுமே நடந்த ‘எலக்‌ஷன்’

புதுச்சேரி: புதுச்சேரியில் இந்த முறையும் உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 2011ம் ஆண்டுவரை பதவியில் இருந்தனர். பிறகு தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் கிடப்பில் போட்டனர். 11 ஆண்டுகளுக்கு பின் 2022ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்த அரசு திட்டமிட்டது. இத்தேர்தல் நடத்துவதற்காக கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரம் (இவிஎம்), கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபாட் ஆகியவை புதுவைக்கு வரவழைக்கப்பட்டது. இவைகள் பத்திரமாக பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டது. இவிஎம் பாதுகாப்பிற்காக 24 மணிநேரமும் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், ‘புதுச்சேரியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு முறையாக இட ஒதுக்கீடு வழங்கவில்லை. குளறுபடி உள்ளது. எனவே, இதை முறைப்படுத்திதான் உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை பொறுத்தே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் என்று கூறப்படுகிறது. இதனால் தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் அடுத்தாண்டு உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக அம்மாநிலத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட், கட்டுப்பாட்டு இயந்திரம் ஆகியவை தேவைப்படுகிறது. ஆகையால் அந்த மாநிலங்களில் இருந்து புதுவைக்கு கொண்டு வரப்பட்டு பாரதிதாசன் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று மீண்டும் கர்நாடகா 1000 (வாக்குப்பதிவு இயந்திரங்கள்), தெலங்கானாவுக்கு (2000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

புதுச்சேரியில் 1968ம் ஆண்டு முதல் முறையாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அடுத்து 38 ஆண்டுகள் கழித்து 2006ல் நடத்தப்பட்டது. 5 ஆண்டுகள் ஆட்சி செய்த உள்ளாட்சி பிரதிநிதிகள், 2011ம் ஆண்டுடன் அவர்களது பணி காலம் முடிவடைந்தது. 55 ஆண்டு வரலாற்றில் இருமுறை மட்டுமே உள்ளாட்சி தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சி தேர்தல் நடந்தால் எம்எல்ஏக்களின் அதிகாரம் குறைந்துவிடும் என்பதால் எம்எல்ஏக்கள் மற்றும் மாநில அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை. ஆனால் ஒன்றிய அரசு ஒதுக்கும் கோடிக்கணக்கான உள்ளாட்சி நிதிகளை புதுவை அரசு இழந்தது தான் மிச்சம்.

* வாகன செலவு மட்டும் ரூ.10 லட்சம்

புதுவை உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் இருந்து தலா 2 கண்டெய்னர் லாரி ஆக மொத்தம் 4 கன்டெய்னர் லாரிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட், கட்டுப்பாட்டு இயந்திரம் ஆகியவை கொண்டு வரப்பட்டது. தற்போதைக்கு இங்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்பதால் மீண்டும் 4 கன்டெய்னர் லாரிகளில் இரு மாநிலங்களுக்கும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. 4 கன்டெய்னர் லாரிகளின் வாடகை மற்றும் இரண்டு தடவையும் ஏற்று கூலி, இறக்கு கூலி உள்பட புதுவை அரசுக்கு ரூ.10 லட்சம் செலவாகும் என அதிகாரி ஒருவர் கூறினார்.

The post எம்எல்ஏக்களின் அதிகாரம் குறைந்துவிடும் என்பதால் ஆர்வம் காட்டாத அரசு புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் ‘நோ’: 55 ஆண்டு வரலாற்றில் 2 முறை மட்டுமே நடந்த ‘எலக்‌ஷன்’ appeared first on Dinakaran.

Related Stories: