செம்மஞ்சேரியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 6,750 குடும்பங்களுக்கு பல லட்சம் மதிப்பிலான நிவாரணம்: அமைச்சர் மெய்யநாதன் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 6,750 குடும்பங்களுக்கு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஏற்பாட்டில் பல லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட செம்மஞ்சேரி பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கடந்த 5 நாட்களாக களப்பணியாற்றி வந்தார். அவரது சொந்த தொகுதியான புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகளும் தன்னார்வலர்களும் இந்த மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்ததோடு அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை அமைச்சர் மெய்யநாதன் தலைமையிலான குழுவினர் வழங்கினர். அப்பகுதியில் தேங்கிய மழை நீரை முழுமையாக அப்புறப்படுத்தி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப களப்பணி ஆற்றியதற்காக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் செம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 6,750 குடும்பங்களுக்கு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஏற்பாட்டில் பல லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் நேற்று வழங்கப்பட்டது. குறிப்பாக அரிசி, குடிநீர், பிரட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தென் சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், செம்மஞ்சேரி கவுன்சிலர் முருகேசன், ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட ஒன்றிய திமுக செயலாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். இத போல நேற்று முன்தினம் 22 ஆயிரம் பேருக்கு நல உதவி வழங்கப்பட்டது. இன்றும் அதே பகுதிகளில் 4 ஆயிரம் பேருக்கு நல உதவிகள் வழங்கப்படுகிறது.
மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதியில் களப்பணி ஆற்றி, மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் துரிதமாகவும் அக்கறையோடும் செயல்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வந்ததற்காக அப்பகுதி பொதுமக்கள் அமைச்சர் மெய்யநாதனுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

 

The post செம்மஞ்சேரியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 6,750 குடும்பங்களுக்கு பல லட்சம் மதிப்பிலான நிவாரணம்: அமைச்சர் மெய்யநாதன் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: