மிக்ஜாம் புயலுக்கு பிறகு நாளை முதல் திறப்பு 4 மாவட்ட கல்லூரிகளில் அதிகாரிகள் ஆய்வு: உறுதித்தன்மை குறித்து அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் பெரும் வெள்ளம் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்ட கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், நாளை (திங்கட்கிழமை) முதல் அனைத்து கல்லூரிகளும் வழக்கம்போல் செயல்பட உள்ளன. கல்லூரி திறக்கப்படுவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, கல்லூரி வளாகங்களை முழுவதுமாக சுத்தம் செய்து முட்புதர்களை அகற்ற வேண்டும். கல்லூரி வளாகத்தில் சுற்றுச்சுவர் ஈரப்பதத்துடன் இருக்கும் என்பதால், சுவரிலிருந்து 20 அடி தூரம் வரை தடுப்புகள் அமைக்க வேண்டும். கட்டிட இடிபாடுகளை அகற்ற வேண்டும். மின் இணைப்புகளை சரி செய்து மின் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும்.

குடிநீர் தொட்டிகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். மழை வெள்ளத்தால் சேதமடைந்த கரும் பலகைகளுக்கு வண்ணம் பூச வேண்டும். கல்லூரி வளாகம் மற்றும் வகுப்பறைகளை முழுவதும் ஆய்வு செய்து கொடிய விஷ ஜந்துகள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 4 மாவட்டங்களில் உள்ள 17 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கல்லூரி கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த ஆய்வுகளில் அனைத்து கல்லூரிகளும் வழக்கம்போல செயல்பட தயாராக உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

The post மிக்ஜாம் புயலுக்கு பிறகு நாளை முதல் திறப்பு 4 மாவட்ட கல்லூரிகளில் அதிகாரிகள் ஆய்வு: உறுதித்தன்மை குறித்து அறிக்கை சமர்ப்பிப்பு appeared first on Dinakaran.

Related Stories: