சென்னை: வெள்ளத் தடுப்பு பணி குறித்து கேள்வி கேட்கும் எடப்பாடி பழனிசாமி உள்பட யாருடனும் விவாதிக்க தயார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழ்நாடு முழுவதும் 3000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நேற்று நடந்தது. அதன் ஒரு பகுதியாக சென்னை சைதாப்பேட்டையில் நடந்த மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: திமுக அமைப்புகள் சார்பில் சைதாப்பேட்டையில் உள்ள 50,000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கையில் செல்போன் வைத்துக்கொண்டு அதிமுக அல்லது வேறு கட்சியை சார்ந்த நபர்களை சில பெண்களை கோபமாக பேச சொல்லி வீடியோ எடுத்து வெளியிடுகின்றனர். விமர்சனம் பற்றி கவலை இல்லை. தேவையான விமர்சனம் என்றால் ஏற்போம். விமர்சனம் செய்பவர்கள் தெருவில் இறங்கி ஒருவரது கண்ணீரை துடைத்த பிறகு விமர்சனம் செய்யட்டும்.
2015ல் பெய்த மழையை விட இந்தாண்டு 2 மடங்கு அதிகமாக பெய்துள்ளது. மக்கள் பாதிப்புகளை கண்காணிக்க வேண்டும். இந்த பெருமழையை அரசியல் செய்ய வேண்டாம், இதுபற்றி கேள்வி கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாக இருந்தாலும், சீமானாக இருந்தாலும் அல்லது மற்ற கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுடன் எதிர் எதிரே விவாதிக்க தயாராகவே உள்ளோம், மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளை நேரிலே அழைத்துச் சென்று காட்ட தயாராகவே உள்ேளாம். இவ்வாறு அவர் கூறினார்.
* குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போட வேண்டும்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ‘‘மழை வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள குழந்தைகள் ரூபெல்லா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் இந்த தடுப்பூசி கையிருப்பில் உள்ளது” என்று தெரிவித்தார்.
The post வெள்ளத் தடுப்பு பணி எடப்பாடி உள்பட யாருடனும் நேரடியாக விவாதிக்க தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.
