எங்களை போன்ற பெண்களுக்கு சோனியா காந்தி முன்னுதாரணம்: காங்கிரஸ் விழாவில் கனிமொழி எம்பி பேச்சு

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சத்தியமூர்த்திபவனில் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு, காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் தலைமை வகித்தார். திராவிடர் கழக தலைவர் கே.வீரமணி, திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, அகில இந்திய காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் ராஜேஷ் லிலோத்தியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி, போர்வை. பிரட் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, சோனியாகாந்தி பிறந்த நாள் விழா 77 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அப்போது, 77 பேருக்கு இரு சக்கர வாகனம், தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில், கனிமொழி எம்பி பேசுகையில், ‘சென்னை புயல் மழையால் பாதிக்கப்பட்டு தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. இந்த வேளையில், சோனியா காந்தி பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய காங்கிரஸ் கட்சிக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தன் வாழ்நாளில் சோனியா காந்தி மக்களுக்காக, நாட்டின் ஒற்றுமைக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். மிகப் பெரிய போராளியாக இருந்து வருகிறார். சோனியா காந்தி தான் எங்களை போன்ற பெண்களுக்கு முன்னுதாரனமாக திகழ்ந்து வருகின்றார்’ என்றார். விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் கோபண்ணா, மாநில பொதுச் செயலாளர்கள் சிரஞ்சீவி, இல.பாஸ்கர், மாவட்ட தலைவர் முத்தழகன், இலக்கிய அணி தலைவர் புத்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post எங்களை போன்ற பெண்களுக்கு சோனியா காந்தி முன்னுதாரணம்: காங்கிரஸ் விழாவில் கனிமொழி எம்பி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: