×

சென்னைக்கு வெள்ள நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல ஆர்டர் தராத விவகாரம்

 

திருச்சி, டிச.9: வெள்ள நிவாரண பொருட்களை கொண்டு செல்ல ஆர்டர் தராத பிரச்னையில் இரண்டு லாரி சங்கங்களை சேர்ந்த டிரைவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. திருச்சி கே.கே.நகரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு உள்ளது. இக்கிடங்கிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லாரிகளில் உணவு தானியப் பொருட்கள் கொண்டு வரப்பட்டு சேமித்து வைக்கப்படுகிறது. இவை தேவைக்கேற்ப லாரிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இந்த சேமிப்பு கிடங்கில் இருந்து அரிசி உள்ளிட்ட தானியங்கள் லாரிகளில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு லாரி நிறுவனத்துக்கு ஆர்டர் வழங்கப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் லாரிகளில் பொருட்களை ஏற்றி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த சிலர், உள்ளூர்வாசிகளான தங்களுக்கும் ஆர்டர் கொடுக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து இரண்டு சங்கத்தை சேர்ந்த லாரி டிரைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இது குறித்து தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி மோதலை தவிர்த்தனர். இதனால் வெள்ள சேத பகுதிகளுக்கு லாரிகளில் நிவாரண பொருட்களை ஏற்றிச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

The post சென்னைக்கு வெள்ள நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல ஆர்டர் தராத விவகாரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Trichy ,Dinakaran ,
× RELATED திருச்சி – சென்னை தேசிய...