செங்கல்பட்டில் திடீர் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

சென்னை: செங்கல்பட்டை மையமாக கொண்டு நேற்று காலை 3.2 ரிக்டர் அளவில் திடீர் நிலஅதிர்வு ஏற்பட்டது. இது, பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு பகுதியை மையமாக கொண்டு மகேந்திரா வேர்ல்டு சிட்டி மற்றும் அதை சுற்றியுள்ள அஞ்சூர், புளிப்பாக்கம், பரனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. இது, ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகியுள்ளது. சரியாக காலை 7.39 மணியளவில் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சுமார் 90 கி.மீ. சுற்றளவு வரை இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் ராகுல்நாத் கூறுகையில், ‘‘இந்த நில அதிர்வால் எந்த பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை’’ என்றார்.

* வேலூர், திருப்பத்தூரிலும்…
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து சாலைகளில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் நேற்று காலை சுமார் 7.40 மணி அளவில் திடீர் நிலஅதிர்வு உணரப்பட்டது. இதேபோல் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை 7.35 மணியளவிலும், 7.42 மணியளவிலும் என 2 முறை நில அதிர்வு உணரப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு காணப்பட்டது.

The post செங்கல்பட்டில் திடீர் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி appeared first on Dinakaran.

Related Stories: