அரசை குறைகூறும் நேரம் இதுவல்ல!: மழை, வெள்ள மீட்புப்பணிகளுக்காக அனைவரும் ஒன்றாக பணியாற்ற வேண்டும்.. கமல்ஹாசன் பேட்டி..!!

சென்னை: மழை, வெள்ள மீட்புப்பணிகளுக்காக அனைவரும் களத்தில் இறங்கி ஒன்றாக பணியாற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை போன்ற தானியங்கள், பிஸ்கட், பால், பால் பவுடர், பாய், போர்வை, பழ வகைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனிடையே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக வடசென்னை, பொன்னேரி, திருவெற்றியூர் பகுதிகளை சேர்ந்த 5000 பேருக்கு தேவையான நிவாரண பொருட்களை இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அனுப்பி வைத்தார்.

அதன்பிறகு சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதற்கு முன்பு வந்ததெல்லாம் சிற்றிடர். இது பேரிடர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கடந்த காலத்தை விட தற்போது அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்பொழுது குறை சொல்லிக்கொண்டு இருப்பதை விட இறங்கி வேலை செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமை. நாங்கள் எப்போதும் அப்படி தான் செய்து கொண்டு இருக்கிறோம். கொரோனா காலத்தில் கூட இந்த வீட்டை நோயாளிகளின் சிகிச்சைக்கு வழங்க முடிவு செய்தேன். ஆனால் அரசு அதை ஏற்கவில்லை. இதுபோன்ற இடைஞ்சல்கள் எங்களுக்கு புதிதல்ல 40 வருடங்களாக அனுபவித்து வருகிறோம்.

இந்த காலகட்டத்தில் அரசை குறைகூறும் நேரம் இதுவல்ல, அதை பிறகு செய்யலாம், நாம் இப்போது மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். வல்லுனர்களுடன் ஆலோசித்து இதுபோன்ற பேரிடர்களுக்கான தீர்வுகளை ஆராய வேண்டும். பேரிடர் ஏற்படுவது உலகம் முழுவதுமான நிகழ்வு. சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் தாங்கும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் 24 மணி நேரத்திற்குள் 56 செ.மீ. மழை பெய்துள்ளது. மழை பெய்தால் பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும். நாம் மக்களுக்கு உதவி செய்யும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். எங்களுக்கு மட்டும் அல்ல அந்த பொறுப்பு உங்களுக்கும் தான் உள்ளது. இந்த மழை வெள்ளத்திலும் செய்தியாளர்கள் செய்திகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்துள்ளார்கள். அதற்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னை வேளச்சேரியில் தினமும் 5,000 பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது வடசென்னை, பொன்னேரி, திருவெற்றியூர், ஆர்.கே.நகர், எழும்பூர், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், பெரம்பூர், ராயபுரம், வேளச்சேரி பகுதிகளை சேர்ந்த 5000 பேருக்கு தேவையான நிவாரண பொருட்களை அனுப்பி வைக்க உள்ளோம். நமக்கு தேவையான முன்னேற்பாடுகளை நாமே செய்து கொள்ள வேண்டும். நாளை மறுநாள் முதல் ம.நீ.ம. சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று கூறினார். மேலும் மழை கால பாதிப்புகளை தடுக்க நீண்டகால திட்டத்தை தீட்ட கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

 

The post அரசை குறைகூறும் நேரம் இதுவல்ல!: மழை, வெள்ள மீட்புப்பணிகளுக்காக அனைவரும் ஒன்றாக பணியாற்ற வேண்டும்.. கமல்ஹாசன் பேட்டி..!! appeared first on Dinakaran.

Related Stories: