மிக்ஜாம் புயலால் சின்ன ஒபுளாபுரம் கிராமத்தில் 5 ஏக்கர் வாழை நாசம்: விவசாயிகள் சோகம்

கும்மிடிப்பூண்டி: சின்ன ஒபுளாபுரம் கிராமத்தில் 5 ஏக்கர் வாழைமரங்கள் மிக்ஜாம் புயலால் நாசமானதால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஒபுளாபுரம் ஊராட்சியில் 1000க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சின்ன ஒபுளாபுரம், எளாவூர் பகுதி, ஈச்சங்காடு மேடு, நாகராஜ் கண்டிகை, மகாலிங்க நகர், துரப்பள்ளம், ரயில்வே ஸ்டேஷன் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வாழை, கம்பு, கிழங்கு, வேர்க்கடலை, கொய்யா ஆகிய உணவு வகைகளை விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு, குறிப்பாக பெரும்பாலான விவசாயிகள் வாழை மரம், கிழங்கு மட்டுமே பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். பொதுவாக, பருவ மழை காரணமாக திடீரென காற்று வீசவது வழக்கம்.

அப்போது, அதிகளவில் வாழை மரங்கள் வளர்ந்து தயார் நிலையில் இருக்கும்போது சாய்ந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும். அதற்கு ஏற்றார் போல் ஒவ்வொரு வாழை மரத்திற்கும் சிறிது காற்று பிடிக்கும் வகையில் கொம்புகள் கொண்டு அதனை கட்டி, பின்பு அறுவடை செய்கின்றனர். இந்தநிலையில் சின்ன ஒபுளாபுரம் பகுதியைச் சேர்ந்த மணிமொழி, அருணாச்சலம் ஆகியோர் சுமார் 5 ஏக்கருக்கு மேல் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் நேற்றுமுன்தினம் காலை மழையில் அடியோடு சாய்ந்தன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை சேதமான வாழை மரங்களை ஆய்வு செய்து அதற்கான, இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்யவில்லை என பெரிய ஒபுளாபுரம் விவசாய சங்கம் சார்பாக திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கருக்கு புகார் மனு அளித்தனர்.

நீரில் மூழ்கிய நெற் பயிர்கள்
திருத்தணி: திருத்தணி, திருவாலங்காடு பகுதியில் நெற் பயிர்கள் நீரில் மூழ்கியதையடுத்து நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, திருவாலங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் மிக்ஜாம் புயலால் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் இருக்கும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று சில விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் நாற்று நடவு பணிகளிலும், டப்பாக்கள் மூலமாகவும் விதை நெல்லை தங்கள் விவசாய நிலங்களில் விதைத்து இருந்த நிலையில், இந்தத் தொடர் மழை காரணமாக அந்த நெல் விதைகளும் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு இன்னல்களுக்கு இடையே கடன்களை பெற்று விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். எனவே தமிழ்நாடு அரசு மழையினால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர் விவசாயிகள் மற்றும் பல்வேறு பயிர்களை செய்துள்ள விவசாயிககளுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மிக்ஜாம் புயலால் சின்ன ஒபுளாபுரம் கிராமத்தில் 5 ஏக்கர் வாழை நாசம்: விவசாயிகள் சோகம் appeared first on Dinakaran.

Related Stories: