சென்னை: சென்னை கடற்கரை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறநகர் பகுதிகளான அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் புறநகர் பகுதியில் உள்ள மாணவர்கள், பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் பயணிக்கின்றனர். இந்நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக ரயில்வே பாலங்கள் மற்றும் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின. குறிப்பாக பேசின்பிரிட்ஜ் – வியாசர்பாடி இடையே உள்ள பாலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்வதற்கான முக்கிய பாலமாகும். இதில் அபாய அளவை தாண்டி தண்ணீர் தேங்கியதால் சென்னை வரும் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், மீட்பு பணிகள் நிறைவடைந்து உள்ளதால் சென்னை சென்ட்ரல் இருந்து ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் வழித்தடத்தில் நேற்று மாலை 3 மணி முதல் 1 மணி நேர கால இடைவெளியில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கடற்கரை – திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி இடையே 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. இன்று முதல் வழக்கமான அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்ட்ரல் – அரக்கோணம் இடையே புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்: இன்று முதல் வழக்கம்போல ஓடும் appeared first on Dinakaran.
