மிக்ஜாம் புயல்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க 160 நடமாடும் மருத்துவ மையங்கள்.. ககன்தீப் சிங் பேடி பேட்டி..!!

சென்னை: வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி பகுதியில் படகில் சென்று சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை கடந்த சில நாட்களாக புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் நேற்று மாலை ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது. சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை, வெள்ளம் ஓய்ந்தாலும் கூட சில பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாததால் மக்கள் முடங்கியுள்ளனர்.சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி பகுதியில் படகில் சென்று சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். பைபர் படகில் சென்று மக்களுக்கு மருந்துப் பொருட்கள் வழங்கி, குறைகளையும் கேட்டறிந்தார். பின்னர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி வழங்க 160 நடமாடும் மருத்துவ மையங்கள் இயங்கி வருகின்றன. மழைநீர் முழுமையாக வடிந்த பிறகு மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்படும். ஏ.ஜி.எஸ். காலனி, டான்சி நகரில் மீட்புப் பணிகளுக்காக 20 படகுகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர், உணவு, மருந்துப் பொருட்கள் தேவைப்படும் மக்களுக்கு படகு மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மழைநீர் மேலும் வடிந்த பிறகு லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

The post மிக்ஜாம் புயல்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க 160 நடமாடும் மருத்துவ மையங்கள்.. ககன்தீப் சிங் பேடி பேட்டி..!! appeared first on Dinakaran.

Related Stories: