இதனால், அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்து உள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று முன்தினம் அங்கித் திவாரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அங்கித் திவாரி தரப்பில் ஆஜரான வக்கீல் விவேக் பாரதி வாதிடுகையில், ‘‘அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’’ என கூறினார்.
இதை எதிர்த்து அரசு தரப்பில் வாதாடிய வக்கீல் அனுராதா, ‘‘சம்பந்தப்பட்ட குற்றவாளி நவீன தொழில்நுட்பம் மூலம், சம்பவ இடத்தில் கையும் களவுமாக ₹20 லட்சம் லஞ்சப் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு ஆரம்பகட்ட நிலையில் இருப்பதால், குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’’ என எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். வழக்கு விசாரணையின்போது, ஊழல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர்கள் பழனிச்சாமி, ரூபா கீதாராணி ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
3 மணி நேரம் டாக்டர் ரகசிய வாக்குமூலம்: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் வாங்கி கைதானது தொடர்பாக, டாக்டர் சுரேஷ் பாபு திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நீதிபதி மோகனாவிடம் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக நேற்று ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். இதில் அங்கித் திவாரியிடம் பேசியது, சந்தித்தது, பணம் அளித்தது உள்ளிட்ட விபரங்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
The post மருத்துவரை மிரட்டி ரூ.40 லட்சம் லஞ்சம் அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.