தலைநகரை தலைகீழாக புரட்டிய மிக்ஜாம் புயல் மழை வெள்ளம் வடியாமல் தேங்குவது ஏன்?: 8 ஆண்டுக்கு பிறகு ஸ்தம்பித்த சென்னை பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்கவைப்பு

சென்னை: மிக்ஜாம் புயலின் தாக்கத்தால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் மழை தொடங்கியது. குறிப்பாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலின் தென்பகுதியிலிருந்து வடக்கு நோக்கி பயணித்த முந்தைய புயல்களான ஒக்கி, நிவர் புயல்கள் மழையை அதிகமாக கொடுத்தன. அதேபோன்று, தமிழக கடற்கரையை ஒட்டி கடந்து சென்ற தானே, வர்தா, கஜா புயல்களால் பாதிப்புஅதிகமாக இருந்தன. இந்நிலையில் மிக்ஜாம் புயல் தென்கிழக்கு வங்கக்கடலில் இருந்து மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி நகர்வதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு அதிக மழை பெய்யும் என வானிலை மையம் ஏற்கனவே கணித்திருந்தது. அதன்படி சென்னையில் பல இடங்களில் வரலாறு காணாத அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக பெருங்குடியில் 24 மணி நேரத்தில் மட்டும் 43 செ.மீ பதிவாகியுள்ளது. கடந்த 4 நாட்களுக்கு மேலாக இடைவிடாது பெய்த கனமழை காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முக்கிய ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகிறது. 2015க்கு பிறகு அதாவது 8 ஆண்டுக்கு பிறகு தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை தற்போது மழை வெள்ளத்தால் ஸ்தம்பித்துள்ளது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரசின் நடவடிக்கையால் உயிர் சேதங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது.

இதனிடையே திருவள்ளூர் மாவட்டத்தில் துவங்கும் கூவம் ஆறு சென்னையின் பல்வேறு பகுதிகளின் வழியாக பயணித்து நேப்பியர் பாலம் அருகே வங்ககடலில் கலக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனூரில் துவங்கும் அடையாறு சென்னை நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக பட்டினம்பாக்கத்தில் வங்ககடலில் கலக்கிறது. சென்னை நகரின் பல்வேறு இடங்கள் பயணிக்கும் பக்கிங்காம் கால்வாய், முட்டுக்காடு, எண்ணூரில்கடலில் கலக்கிறது. அதேபோல் கொசஸ்தலையாறு திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில்ட பயணித்து எண்ணூரில் கடலில் கலக்கிறது. பொதுவாக பருவமழை காலங்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்கின்ற மழை இந்த நீர் வழித்தடங்களின் வழியாகவே கடலில் கலந்து வருகிறது.

ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் அடையாறு ஆற்றில் கலந்து வருகிறது. மேலும் படப்பை அருகில் உள்ள மணிமங்கலம் பெரிய ஏரியில் இருந்து உபரிநீர் அதிக அளவு வெளியேறி அடையாறு ஆற்றில் கலக்கிறது. இதேபோல் சுற்றி உள்ள ஆதனூர் ஏரி, சிக்கனா ஏரி, பெருங்களத்தூர் ஏரி, இரும்புலியூர் உள்ளிட்ட சிறிய ஏரிகளும் நிரம்பி அதில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியில் பெய்யும் மழைநீர் பாம்பன் கால்வாய் வழியாக அடையாறு ஆற்றுக்கு வருகிறது. அதேபோல் வட சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள மழை நீர், கூவம் ஆறு வழியே வெளியேற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடையாறு, கூவம் ஆற்றில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சமீபத்தில் அடையாறு மற்றும் கூவம் ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்பட்டு தூர்வாரப்பட்டதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மிக்ஜாம் புயலானது சென்னைக்கு அருகே மையம் கொண்டிருந்ததால், அதன் மேற்கு பகுதியில் மேகங்கள் நகராமல் அப்படியே இருந்தது. மேலும் புயலானது கடற்கரையையொட்டி இருந்ததால் கடலில் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் நேற்று அதிகாலை கடல் அலைகள் 3.54 அடி உயரத்திற்கு எழும்பி, காலை 7.22 மணிக்கு 1.74 அடியாக குறைந்தது. அதேபோல் மதியம் 12.57 மணிக்கு மீண்டும் உயர் அலைகள் 2.66 அடிக்கு மேல் எழும்பியுள்ளது. இதனால் அடையாறு, கூவம் ஆறு உள்ளிட்ட ஆறுகளின் நீரானது கடலுக்குள் செல்ல முடியாமல் திரும்ப வருகிறது. இதனால் நீர் வடிவதில் தாமதம் ஆகிறது. சென்னை மழை நீர் கடலுக்குள் வடியாமல் நிற்பதற்கு உயர் அலைகள் ஒரு பெரும் காரணமாக இருந்து வருகிறது. அதோடு தொடர்ந்து மழையும் கொட்டி வருவதால் தண்ணீர் நகருக்குள்ளேயே தேங்கி நிற்கிறது. இதனால், ஆறுகளிலிருந்து வெளியேறும் தண்ணீர் எப்போது கடலுக்குள் உள் வாங்குகிறதோ அப்போது தான் படிப்படியாக சென்னையில் தேங்கி நிற்கும் மழைநீர் வடியத் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post தலைநகரை தலைகீழாக புரட்டிய மிக்ஜாம் புயல் மழை வெள்ளம் வடியாமல் தேங்குவது ஏன்?: 8 ஆண்டுக்கு பிறகு ஸ்தம்பித்த சென்னை பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்கவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: