ஆளுநர் மாளிகையை சூழ்ந்த வெள்ளம்

சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை வெள்ளம் சூழ்ந்ததுடன், அங்கிருந்து ஆறாக தண்ணீர் சாலை வழியாக வெளியேறியது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை கடலுக்குள் சென்று கலக்காமல் அப்படியே நகர் பகுதியை சுற்றி ஆங்காங்கே தேங்கி நின்றது. கடல் மட்டும் அதிகரித்ததாலும், கடலில் புயல் காற்று அதிகமாக இருந்ததாலும் தண்ணீர் உள்வாங்காமல் கடநீரும் வெளியேறியதால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சென்னையின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனி தீவுகளாக காட்சி அளித்து, பொதுமக்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். . அனைத்து சாலைகளும் குளங்களாக காட்சி அளித்தது. அதிகளவிலான வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

இந்த கனமழை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையையும் விட்டு வைக்கவில்லை. ஆளுநர் மாளிகை சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கனமழை காரணமாக ஆளுநர் மாளிகை முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் ஆளுநர் மாளிகையில் இருந்து வழக்கமாக மழைநீர் வடிகால்வாய் மூலம் வெளியேறாமல் அப்படியே ஆறுபோல தண்ணீர் ஆளுநர் மாளிகையின் பிரதான வாயில் வழியாக கிண்டி போக்குவரத்து சாலையில் ஓடியது. இதனால் ஆளுநர் மாளிகை மட்டுமல்லாமல், வெளிப்புற பகுதிகளும் குளம்போல் காட்சி அளித்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்து செல்லும் நிலை ஏற்பட்டது.

The post ஆளுநர் மாளிகையை சூழ்ந்த வெள்ளம் appeared first on Dinakaran.

Related Stories: