×

தாலுகா மருத்துவமனையாக தொடர்ந்து செயல்பட வேண்டும்

நாமக்கல் டிச.3: நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை, தாலுகா மருத்துவமனையாக தொடர்ந்து செயல்பட வேண்டும் என இந்து சமய பேரவை சார்பில், கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாமக்கல் ஆன்மீக இந்து சமயப் பேரவை சார்பில், கலெக்டர் உமாவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விபரம்: நாமக்கல் நகரின் மையப் பகுதியில், மோகனூர் ரோட்டில், பஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள, நாமக்கல் அரசு மருத்துவமனை, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில், மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டதால், இந்த மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, தற்போது, திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் நகரில் இருந்து சுமார் 9 கி.மீ தூரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காசநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், எச்ஐவி போன்ற நோயாளிகள், நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து மிக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நடந்துவந்து, பல்வேறு சிகிச்சைகள் பெற்று, மருந்து மாத்திரைகளை எளிதாக வாங்கிச் சென்றனர். தற்போது அவர்கள் 9 கி.மீ தொலைவிற்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி, பழைய அரசு மருத்துவமனையை தாலுகா தலைமை மருத்துவமனையாக அங்கீகரித்து, அவசர சிகிச்சை, நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சை மற்றும் புற நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட சில பிரிவுகளை மட்டும், அதே மருத்துவமனையில் இயங்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

The post தாலுகா மருத்துவமனையாக தொடர்ந்து செயல்பட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Taluka Hospital ,Namakkal ,
× RELATED நாமக்கல் தாலுகா பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு