×

பண்ணாரி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி

 

சத்தியமங்கலம், டிச.3: பண்ணாரி அருகே சாலை ஓர வனப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த கூலி தொழிலாளி காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதி காளி திம்பம் கிராமத்தை சேர்ந்தவர் மணி (60). விவசாய கூலி தொழிலாளி. நேற்று பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுற வனப்பகுதியில் மணி உட்பட 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலையோர வனப்பகுதியில் உள்ள புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மாலை 3 மணி அளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை சாலையோர வனப்பகுதியில் புதர்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை துரத்தியது. அப்போது, தொழிலாளர்கள் அனைவரும் தப்பி ஓடினர். இந்நிலையில், காட்டு யானை, மணியை தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதை கண்ட மற்ற தொழிலாளர்கள் சத்தம் போட்டு காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பவானிசாகர் வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் மணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வனத்துறை சார்பில் நடைபெற்ற பணிக்கு வந்த கூலி தொழிலாளியை காட்டு யானை தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவரின் குடும்பங்களுக்கு வனத்துறை சார்பில் தமிழக அரசால் வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.5 லட்சம் மணியின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பண்ணாரி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Pannari ,Dinakaran ,
× RELATED பண்ணாரி வனப்பகுதியில் உடல் நலம்...