வங்கக் கடலில் புயல் சின்னம் எதிரொலி பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன? தமிழக அரசு விளக்கம்

சென்னை: வங்கக்கடல் பகுதியில் உருவாகும் புயல் சின்னம், கனமழை காரணமாக தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது.

* சென்னை மாநகராட்சி சார்பில், 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை தகவல்கள் வழங்குவது, பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகளில் இருந்து பொதுமக்களை முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் மற்றும் இதர நிவாரண மையங்களை அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழைநீரை அகற்ற நீர் இறைப்பான்கள் மற்றும் தடையின்றி குடிநீர் வழங்க சிறப்பு ஏற்பாடு, பொதுமக்களுக்கு தடையின்றி பால் விநியோகம் மற்றும் பால் பவுடர் இருப்பு வைத்திருப்பது உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

* கனமழையின் காரணமாக மழைநீர் தேங்கி பயிர்கள் பாதிப்பிற்குள்ளாகாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அறிவுரை வழங்குமாறு வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை ஆணையர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

* மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு முப்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

* எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.

* தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 200 வீரர்கள் கொண்ட 8 குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ள விரைந்துள்ளனர்.

* 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 4,967 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன.

* மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன.

* புயல், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் ்TNSMART செயலி மூலமாகவும், Twitter, Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 6% குறைவு
வடகிழக்கு பருவமழை 21.10.2023 அன்று தொடங்கியதில் இருந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில், 1.10.2023 முதல் 1.12.2023 வரை 33.48 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவை காட்டிலும் 6 சதவீதம் குறைவு ஆகும். வடகிழக்கு பருவமழை காலத்தில் 1.12.2023 முடிய, 9 மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவும், 13 மாவட்டங்களில் இயல்பான மழைப்பொழிவும், 16 மாவட்டங்களில் குறைவான மழைப்பொழிவும் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான அறிவுரை
* இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் TNSMART செயலி மூலம் பகிரப்படும் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்.

* மின்கலம் முறையாக பராமரிக்க வேண்டும்.

* அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

* பதற்றத்தை தவிர்த்து, அமைதி காக்க வேண்டும்.

* சூறைக்காற்றினால் ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு பாதிப்பு ஏற்படும். ஏனவே அவற்றை மூடி வைக்க வேண்டும்.

* விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

* ஒரு சில நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, நீர் மற்றும் மருந்துகளை கையிருப்பில் வைக்க வேண்டும்.

* தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் பேரில் முன்கூட்டியே நிவாரண மையங்களுக்கு செல்ல வேண்டும்.

* மீனவர்கள், படகுகளுக்கு இடையே போதுமான இடைவெளி விட்டு படகுகளை பாதுகாப்பான இடத்தில் கட்டி வைக்க வேண்டும்.

பொதுமக்கள் செய்யக்கூடாதவை
* மொட்டை மாடிகளில் நின்று வேடிக்கை பார்க்க வேண்டாம்.

* மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.

* புயல் கரையை கடக்கும்போது வாகனத்தில் பயணிக்க வேண்டாம்.

* புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் திடீரென்று குறையும். அதனால் புயல் கடந்து விட்டதாக எண்ண வேண்டாம். மந்த நிலைக்கு பின் மீண்டும் சூறைக்காற்று பலமாக வீசும். எனவே, இந்திய வானிலை ஆய்வு மையத்திலிருந்து புயல் கடந்து விட்டது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியில் செல்ல வேண்டாம்.

* யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்.

* மறுஉத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.

* பழுதடைந்த கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம்.

* மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு அருகில் நிற்க வேண்டாம்.

* ஈரமாக இருப்பின் மின் சாதனங்களை உபயோகிக்க வேண்டாம்.

புயல் நேரத்தில் பாதுகாப்பு குறிப்புகள்
* கயிறு, மெழுகுவர்த்தி, டார்ச்லைட், தீப்பெட்டி, மின்கலங்கள், மருத்துவ கட்டு, கத்தி, உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.

* காய்ச்சிய குடிநீரை பருகவும், சுகாதாரமான உணவை உண்ணவும்.

* புயல் தொடர்பான எச்சரிக்கை திரும்ப பெறப்பட்ட பின்னரே வாகனத்தில் பயணிக்க வேண்டும்.

* வெளியில் இருக்கும் மக்கள் அருகில் உள்ள பாதுகாப்பு மையத்திலோ அல்லது பாதுகாப்பான கட்டடத்திலோ தங்க வேண்டும்.

* புயல் தொடர்பான எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

* அறுந்து விழுந்த மின்கம்பிகளின் மீது கவனம் வேண்டும்.

* மழை காலங்களில் பாம்பு மற்றும் பூச்சி கடிகளை தவிர்க்க கையில் தடியை எடுத்து செல்ல வேண்டும்.

* தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

The post வங்கக் கடலில் புயல் சின்னம் எதிரொலி பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன? தமிழக அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: