கலைஞர் நூற்றாண்டு விழா வினாடி வினா போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு கனிமொழி எம்பி பரிசு வழங்கினார்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த வினாடி வினா போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு கனிமொழி எம்பி பரிசு வழங்கினார். இதில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். திமுக மகளிரணி சார்பில் கலைஞரின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி ஏற்பாட்டில் கலைஞர் 100 வினாடி வினா போட்டிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மண்டல அளவிலான 2ம் கட்ட போட்டி, தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் நேற்று நடைபெற்றது.

போட்டியை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தலைமை வகித்து தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கனிமொழி எம்பி பேசுகையில், கலைஞரின் வாழ்வில் இருந்து ஒன்றை கற்றுக் கொள்ளலாம். இந்த விளையாட்டில் போட்டியாளர்கள் பலரும் பாதுகாப்பாக விளையாட வேண்டும் என்பது தெரிகிறது, ஆனால் கலைஞர் இவ்வாறு பாதுகாப்பாக இருக்க மாட்டார். எதையும் தைரியமாக எதிர்கொண்டு ஆடுவார், அதனால்தான் 5 முறை முதலமைச்சராகவும், நாடே போற்றும் தலைவராகவும் விளங்கினார். போட்டியில் பங்கேற்றுள்ள இளைஞர்கள் பலரும் திராவிட இயக்கம், கலைஞரின் வாழ்க்கை, தமிழரின் வரலாற்றை தேடித்தேடி படிக்க ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்பதில் மிக்க மகிழ்ச்சி ஏற்படுகிறது, என்றார்.

விழாவில் எம்எல்ஏக்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், தூத்துக்குடி மாவட்ட பஞ். தலைவர் பிரம்மசக்தி, திமுக மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், மாநில மகளிரணி பிரசாரக் குழு செயலாளர் ஜெஸி பொன்ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மண்டல அளவிலான 2ம் கட்டப் போட்டியில், தூத்துக்குடி மண்டலத்தில் (திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி) ஆகிய மாவட்ட குழுக்கள் பங்கேற்றனர்.

18 வயதிற்கு மேற்பட்டோருக்கான போட்டியில் திருநெல்வேலி அணி வெற்றிபெற்றது, இந்த குழுவில் சரவணச்செல்வி, நடராஜன், சரண்யா ஆகியோர் பங்கேற்றனர். 18 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் கன்னியாகுமரி அணி வெற்றிபெற்றது, இந்த குழுவில் அர்ச்சனா, அபிநயா, ஆதர்ஷினி ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினர். இரு பிரிவுகளிலும் இறுதிச் சுற்றில் வெற்றிபெறும் அணிகளுக்கு தலா ₹10 லட்சமும், 2ம் இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ₹6 லட்சமும், 3ம் இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ₹3 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. வெவ்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பரிசு வழங்குகிறார்.

The post கலைஞர் நூற்றாண்டு விழா வினாடி வினா போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு கனிமொழி எம்பி பரிசு வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: