திருச்சி அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள கிளியூர் கிராமம் கல்லணையிலிருந்து பிரியும் வெண்ணாற்றின் கரையில் உள்ளது. இங்குள்ள குளத்திற்கு வெளிநாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் வலசை வருகின்றன. தற்போது வலசை வந்துள்ள பறவைகள் குளம் முழுவதும் பரவி அமர்ந்துள்ளது ஆச்சரியமளிக்கிறது.
பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம், நாடு விட்டு நாடு பறந்து வந்து கிளியூர் வந்து செல்கின்றன. கிளியூருக்கு வலசை வந்துள்ள இந்த பறவைகள் ஐரோப்பா, மத்திய ஆசியா போன்ற நாடுகளிலிருந்து வந்துள்ளன. இதில் காட்டு வாத்து இனத்தை சேர்ந்த நீலச்சிறகி வாத்து , ஆண்டிவாத்து, ஊசிவால் வாத்து, சீழ்கை சிறவி, குள்ளதாரா வாத்து ஆகியவை குளத்தை அலங்கரித்து கொண்டிருக்கின்றன. ஆண்டுமுழுவதும் காணப்படும் நீர்காகங்கள், பாம்பு தாராக்கள், முக்குளிப்பான்கள் ஆகியவற்றுடன் ஆலாக்களும் சேர்ந்து மீன்வேட்டையாடுவது ஏரியின் வளமையை காட்டுகிறது. பொறி உள்ளான், தகைவிலான், கீச்சான் போன்ற உள்நாட்டிற்குள் வலசை செல்லும் பறவைகளும், மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, அரிவாள் மூக்கன் போன்று குறைந்த தூரம் வலசை செல்லும் பறவைகளையும் இங்கு ஏராளமாக காணமுடிகிறது.
இதுகுறித்து பறவை ஆர்வலர்கள் பாலா பாரதி, தங்கமணி ஆகியோர் கூறியதாவது: பறவைகள் தங்களது நலனுக்காக வலசை போனாலும் இவற்றால் மகரந்த சேர்க்கை, கழிவுகளால் மண்வளம் பெருகுதல், பூச்சிகளின் எண்ணிக்கை கட்டுப்படுதல், விதைகளை பரப்புதல் மூலம் தாவர வகைகள் பரவுதல் என பல்லுயிர் பெருக்கம் நிலைபெறுவதற்கு காரணமாக அமைகிறது என்றனர்.
The post திருச்சி அருகே ஒரு வேடந்தாங்கல்: ஆயிரக்கணக்கில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகள் appeared first on Dinakaran.
