×

கான்கிரீட் திட்டத்தை கைவிடக்கோரி கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் நடைபயணம்

 

ஈரோடு, டிச.2:கான்கிரீட் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 14ம் தேதி கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் நடை பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகளின் அவசர ஆலோசனைக்கூட்டம் ஈரோடு அருகே உள்ள கூரபாளையத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை வகித்தார்.

விவசாய மற்றும் பாசன சபை சங்கங்களின் தலைவர்கள் வெங்கடாசலம், செங்கோட்டையன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். வாய்க்காலில் உள்ள பழைய கட்டுமானங்களை சீரமைக்க வேண்டும். 34 கசிவு நீர்த்திட்ட பாசன விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும். வாய்க்கால் பாசன திட்டத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.  அனைத்து கடைமடை வரை முழுமையாக தண்ணீர் செல்ல ஏதுவாக கீழ்பவானி வாய்க்காலை ஆண்டுதோறும் முறையாக தூர்வார வேண்டும்.

பழுதடைந்த மதகுகளை சீரமைக்க வேண்டும். பாசன சபைக்கு முறையாக தேர்தல் நடத்த வேண்டும்.மண் அணை, மண் வாய்க்கால் மக்களுக்கானது என்ற முழக்கத்தை முன்வைத்து, விவசாயம், குடிநீர், சுற்றுச்சூழல் காத்திட வரும் டிசம்பர் 14ம் தேதி காலை 9.30 மணி அளவில், ஈரோடு, திண்டலில் இருந்து நடை பயணமாக கலெக்டர் அலுவலகம் சென்று அவரை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் விவசாயிகள் மற்றும் குடிநீர் ஆதாரம் பெறும் கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

The post கான்கிரீட் திட்டத்தை கைவிடக்கோரி கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் நடைபயணம் appeared first on Dinakaran.

Tags : Kilpawani Irrigation Protection Movement ,Erode ,Kilpawani ,
× RELATED குடற்புழு நீக்க மாத்திரைகள் முழுமையாக விநியோகம்