சென்னை வந்தபோது நடுவானில் கோளாறு மஸ்கட்டில் தரையிறங்கியது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்: 5 மணிநேரம் தவிப்புக்குள்ளான பயணிகள்

சென்னை: லண்டனிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், தினமும் அதிகாலை 5.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துவிட்டு, மீண்டும் காலை 7.45 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும். அதேபோல், நேற்று அதிகாலை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், லண்டனிலிருந்து 247 பயணிகளுடன் புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார்.

இதையடுத்து அந்த விமானம், மஸ்கட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. அதன் பின்பு விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு, விமானம் மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. இதனால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 5 மணி நேரம் தாமதமாக, நேற்று காலை 10.30 மணிக்கு சென்னை வந்தது.

அதே விமானம், மீண்டும் சென்னையில் இருந்து பகல் 12.20 மணிக்கு 5 மணி நேரம் தாமதமாக லண்டன் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் இந்த விமானத்தில், சென்னையில் இருந்து லண்டன் செல்வதற்காக 229 பயணிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு முன்னதாகவே வந்து காத்திருந்தனர். இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

The post சென்னை வந்தபோது நடுவானில் கோளாறு மஸ்கட்டில் தரையிறங்கியது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்: 5 மணிநேரம் தவிப்புக்குள்ளான பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: