×

நாடு பொருளாதார வளர்ச்சி அடைய மாணவர்கள் உழைப்பு அவசியம் தேவை

திருச்சி, டிச.2: நாடு பொருளாதார வளர்ச்சி அடைய மாணவர்கள் உழைப்பு அவசியம் தேவை என்று எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்தார். திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரி, வணிகவியல் துறை பகல் பிரிவு கல்லுாரி 75ம் ஆண்டு விழாவும், மாலை பிரிவு கல்லுாரி 50ம் ஆண்டு விழாவும் நேற்று நடைபெற்றது. வணிகவியல் துறை தலைவர் அலெக்சாண்டர் பிரவீன்துரை வரவேற்றார், கல்லூரி முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் மற்றும் செயலாளர் அமல் வாழ்த்தி பேசினர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர் எம்பி திருநாவுக்கரசர் பேசியதாவது: செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்த மாணவர்கள் சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். அரசியல், நீதித்துறை, திரைத்துறை, கலைத்துறை, வணிகத்துறை போன்ற பல்வேறு துறைகளில் இக்கல்லுாரி மாணவர்கள் சாதித்துள்ளனர்.

உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த விஞ்ஞானி அப்துல் கலாம் ஐயாவும் இங்கு தான் படித்தார். அவர் எப்போதும் மாணவர்களை பெரிதாக கனவுகள் காண சொல்வார். அதற்கேற்ப உங்கள் கனவுகளை நனவாக்க இன்றைய தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதை சரியாக பயன்படுத்தி முன்னேற வேண்டும். சாதி, மதம், இனம் ஆகிய எதுவும் மனிதனை மதிப்பிடுவது கிடையாது, அவனது உழைப்பும், வாழ்வில் அவன் அடைந்த உயரமும்தான் மதிப்பிடுகிறது. படுத்துக் கிடக்கும் குதிரைவாலில் குருவி கூட கூடு கட்டும் என்ற பழமொழி உள்ளது.

அதற்கேற்ப வாழ்வில் வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும். 2030ம் ஆண்டு இந்தியா 3வது பெரிய பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இருக்கும் என்று கருத்துக் கணிப்புகள் சொல்கிறது. அதற்கு மாணவர்கள் உழைப்பு நிச்சயம் தேவை. இந்தியர்கள் உலக முழுவதும் சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஷ் ஆகியோர் இதற்கு எடுத்தக்காட்டு. இன்றைய காலம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். இவ்விழாவில் ஆர்பிஐ அதிகாரி நாராயணசாமி, கல்லூரி ரெக்டர் பவுல்ராஜ் மைக்கேல், பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வணிகவியல்துறை பேராசிரியர் பெர்க்மென்ஸ் நன்றி கூறினார்.

The post நாடு பொருளாதார வளர்ச்சி அடைய மாணவர்கள் உழைப்பு அவசியம் தேவை appeared first on Dinakaran.

Tags : Trichy ,Thirunavukarasar ,
× RELATED மின் கசிவால் அசைவ உணவகத்தில் தீ விபத்து