×

மாமல்லபுரத்தில் மூடப்பட்ட ரயில் பயணிகள் முன்பதிவு மையம் மீண்டும் திறக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு

மாமல்லபுரம், டிச.2: மாமல்லபுரத்தில் மூடிய ரயில் பயணிகள் முன்பதிவு மையம் மீண்டும் திறக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். மாமல்லபுரத்தில் கடந்த 2003ம் ஆண்டு இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான கட்டிடத்தில் ரயில் பயணிகள் முன்பதிவு மையம் தங்கு தடையின்றி 15 ஆண்டுகளாக இயங்கி வந்தது. மேலும், மாத வாடகை ஆண்டு ஒப்பந்தம் மற்றும் 11 சதவீத வாடகை உயர்வு அடிப்படையில் இந்த மையம் செயல்பட்டது. ரயில்வே நிர்வாகம் பல ஆண்டுகளாக ஒப்பந்த உரிமம் புதுப்பிக்காமல், கடந்த சில ஆண்டுகளாக நிலுவை தொகை ரூபாயையும் செலுத்தாமல் இருந்து வந்தது. கடந்த, 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் வாடகை உரிமத்தை ரத்து செய்வதாக ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்தது.

இதையடுத்து, ரயில்வே வணிக பிரிவு முன்பதிவு மையத்தை மூடுவதாக அறக்கட்டளை நிர்வாகத்திடம் தெரிவித்தது. இதற்கிடையே, கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் வாடகை நிலுவை தொகை ₹1,40,382 செலுத்துமாறு, அறக்கட்டளை நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தியும், ரயில்வே வணிக பிரிவு நிர்வாகம் அப்போது வரை செலுத்தவில்லை. இதையடுத்து, மையத்தை மூடி, பொருட்களை வெளியே எடுக்குமாறு ஊழியர்களுக்கு ரயில்வே வணிக நிர்வாகம் உத்தரவிட்டது. பின்னர், கடந்த 2018ம் ஆண்டு வாடகை நிலுவை தொகையை விரைவில் செலுத்துவதாக கூறி கணினி, டேபிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வெளியே எடுத்து, எந்தவொரு முன்னறிவிப்புமின்றி முன்பதிவு மையத்தை திடீரென மூடியது. இதனால், பொதுமக்கள் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள், வெளிநாட்டு பயணிகள் கடும் சிரமமடைந்து வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மூடிய ரயில் முன்பதிவு மையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் கூறுகையில், ‘கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நாடு முழுவம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள், விடுமுறை தினங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக 35 கிமீ தூரம் உள்ள செங்கல்பட்டுக்கும், 50 கிமீ தூரம் உள்ள தாம்பரத்திற்கும் சென்று டிக்கெட் முன்பதிவு செய்து வந்தனர். மேலும், அருகில் உள்ள கல்பாக்கம் அல்லது மாமல்லபுரத்தில் ரயில் முன்பதிவு மையம் துவங்க வேண்டும் என பல ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று மாமல்லபுரத்தில் கடந்த 2003ம் ஆண்டு ரயில் முன்பதிவு மையம் தொடங்கபட்டு, 2017ம் ஆண்டு வரை இம்மையம் ஆளவந்தார் அறக்கட்டளை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதனால், அணுமின் நிலைய ஊழியர்கள் மட்டுமின்றி, சுற்றுப்புற கிராம மக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயனடைந்து வந்தனர். இந்நிலையில், வாடகை பாக்கியை செலுத்தாத நிலையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென ரயில்வே முன்பதிவு மையம் மூடப்பட்டது. இதனால், 50 கிமீ தூரம் சென்று ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதால் நேரம் விரயம் ஏற்படுகிறது. எனவே, கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் மற்றும் சுற்றுப்புற மக்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு மாமல்லபுரத்தில் மீண்டும் ரயில் முன்பதிவு மையத்தை திறக்க வேண்டும்,’ என்றனர்.

The post மாமல்லபுரத்தில் மூடப்பட்ட ரயில் பயணிகள் முன்பதிவு மையம் மீண்டும் திறக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Dinakaran ,
× RELATED முட்டுக்காடு அருகே விபத்தில்...