ஊராட்சி தலைவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மனைவி, காதலனுக்கு ஆயுள் ஆரணி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு காதலுக்கு இடையூறாக இருந்ததால்

ஆரணி, டிச.1: ஊராட்சி மன்ற தலைவரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக்கொன்ற மனைவி மற்றும் அவரது காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஆரணி நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த மருசூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் சுந்தரமூர்த்தி(42). இவரது மனைவி செந்தாமரை. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 2009ம் ஆண்டில் விபத்தில் காயம் அடைந்த சுந்தரமூர்த்தி, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது, மனைவி செந்தாமரை தினமும் வீட்டில் உணவு சமைத்து, அதனை மருத்துவமனைக்கு எடுத்து சென்று கணவருக்கு கொடுத்துவிட்டு வந்துள்ளார்.

அவரை அதே கிராமத்தை சேர்ந்த உறவினர் மதியழகன் என்பவர் பைக்கில் அழைத்து சென்று வந்துள்ளார். அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பின்னர், சுந்தரமூர்த்தி சிகிச்சை முடிந்து வீட்டில் இருந்தபோது மதியழகனுக்கும், அவரது மனைவிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால், தங்களது காதலுக்கு இடையூறாக உள்ள சுந்தரமூர்த்தியை தீர்த்துக்கட்ட இருவரும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த 23.01.2009 அன்று சொந்த வேலை காரணமாக சுந்தரமூர்த்தி சென்னைக்கு சென்றார். உடனே செந்தாமரை தனது காதலன் மதியழகனை வீட்டிற்கு வரவழைத்து நாட்டு பட்டாசு மற்றும் பெட்ரோல் வாங்கிவர சொன்னார். பின்னர், சுந்தரமூர்த்தியின் படுக்கை அறையில் ஒருதுணியில் சுற்றி பட்டாசுகளை ஒருபுறமும், பெட்ரோலை வெளியிலும் மறைத்து வைத்துள்ளனர்.

பின்னர், சென்னையில் இருந்து வீட்டிற்கு வந்த சுந்தரமூர்த்தி இரவு சாப்பிட்டு விட்டு தனது படுக்கை அறைக்கு சென்று தூங்கியுள்ளார். நள்ளிரவு 1 மணியளவில் செந்தாமரை, தனது காதலன் மதியழகனை மீண்டும் வீட்டிற்கு வரழைத்து, அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி வீட்டின் முன்கதவுகளை பூட்டினர். பின்னர், சுந்தரமூர்த்தி படுத்திருந்த அறையின் பின்புறமாக வந்து, அவர்கள் ஏற்கனவே துணியில் மறைத்து வைத்திருந்த பட்டாசு மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். இதனால் படுக்கையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சுந்தரமூர்த்தி உடலில் தீப்பிடித்து எரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சுந்தரமூர்த்தியின் தந்தை விஸ்வநாதன் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தாமரை மற்றும் அவரது காதலன் மதியழகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ஆரணி கூடுதல் மாவட்ட அமர்வு மற்றும் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன்படி, நேற்று இந்த வழக்கு விசாரணை மாவட்ட அமர்வு நீதிபதி கே.விஜயா முன்னிலையில் நடந்தது. அரசு வழக்கறிஞர் கே.ராஜமூர்த்தி வாதிட்டார். தொடர்ந்து, இருதரப்புவாதங்களையும் கேட்ட மாவட்ட அமர்வு நீதிபதி, இந்த கொலை குற்றத்திற்காக மதியழகன், செந்தாமரை ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post ஊராட்சி தலைவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மனைவி, காதலனுக்கு ஆயுள் ஆரணி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு காதலுக்கு இடையூறாக இருந்ததால் appeared first on Dinakaran.

Related Stories: