×

ஆம்புலன்சுக்கு ஓட்டுநர் இல்லாததை கண்டித்து மருத்துவமனையை பூட்டி இளைஞர்கள் போராட்டம்

திருக்கனூர், டிச. 1: ஆம்புலன்சுக்கு ஓட்டுநர் இல்லாததை கண்டித்து மருத்துவமனையை பூட்டி இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். புதுச்சேரி திருக்கனூர் அருகே உள்ள மண்ணாடிப்பட்டில் 24 மணி நேரமும் இயங்கும் சமுதாய நலவழி மையத்தில் 2 ஆம்புலன்ஸ் இயங்கி வருகிறது. மண்ணாடிப்பட்டை சேர்ந்த ரவிக்குமார் (21) என்பவர் அவரது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்ற அவர், பட்டாசு வெடித்து விரலில் அடிபட்டு ரத்த காயத்துடன் மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதித்த டாக்டர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக பரிந்துரை செய்தார்.

ஆனால், மருத்துவமனையிலேயே அவசர சேவைக்கான ஆம்புலன்ஸ் இருந்தும் டிரைவர் இல்லாததால் தனியார் வாடகை கார் மூலம் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் மருத்துவமனையின் கேட்டை இழுத்து பூட்டு போட்டு பூட்டினர். மேலும், மருத்துவ அதிகாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞர்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது, மருத்துவமனைக்கென ஒதுக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸை இங்கேயே நிறுத்தி வைக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். தொடர்ந்து, மருத்துவமனை கேட்டில் போடப்பட்டிருந்த பூட்டை போலீசார் சுத்தியால் உடைத்து திறந்து விட்டனர். பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஆம்புலன்சுக்கு ஓட்டுநர் இல்லாததை கண்டித்து மருத்துவமனையை பூட்டி இளைஞர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirukanur ,Puducherry ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி சிறையில் செல்போன்கள் பறிமுதல்