×

தொடர் மழையால் 13 ஏரிகள் நிரம்பியது

நாமக்கல், டிச.1: நாமக்கல் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால், ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, 13 ஏரிகள் நிரம்பியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மில்லி மீட்டராகும். கடந்த 21ம் தேதி வரை 700.76 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நவம்பர் மாதம் முடிய, இயல்பு மழையளவை விட 104.15 மில்லி மீட்டர் அதிகமாக மழை பெய்துள்ளது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கொல்லிமலை பகுதியில் பெய்து வரும் மழையால், அடிவார பகுதியில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாய பணி களை அவர்கள் துவங்கியுள்ளனர்.

மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில், 79 ஏரிகள் அமைந்துள்ளன. இதில், தற்போதைய நிலவரப்படி 13 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது. செருக்கலை, சேமூர் பெரியஏரி, இடும்பன்குளம், பருத்திபள்ளி, இலுப்புலி, வேட்டம்பாடி, மாமுண்டி அக்ரஹாரம், மல்லசமுத்திரம் சின்னஏரி, பாலமேடு சின்னஏரி, மாணிக்கம்பாளையம், தேவனாம்பாளையம் ஆகிய ஏரிகள் நிரம்பியுள்ளன.

80 முதல் 90 சதவீதம் வரை 2 ஏரிகளும், 70 முதல் 80 சதவீதம் வரை 3 ஏரிகள், 50 முதல் 70 சதவீதம் வரை ஒரு ஏரியும், 50 சதவீதம் வரை 9ஏரிகள், 25 சதவீதம் வரை 20 ஏரிகளும் நிரம்பியுள்ளன. மாவட்டத்தில் உள்ள 31 ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து முற்றிலுமாக வரவில்லை.

இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு, நாமக்கல் மாவட்டத்தில் மழை அதிகம் பெய்துள்ளது. இதனால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கொல்லிமலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால், அடிவாரம் மற்றும் அதன் அருகாமையில் உள்ள 6 ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நிரம்பி விடும். மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான தூசூர் ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது,’ என்றார்.

The post தொடர் மழையால் 13 ஏரிகள் நிரம்பியது appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Dinakaran ,
× RELATED இடைநிலை ஆசிரியர் பணிக்கு போட்டி தேர்வு