×

போலி பில் கண்டறியப்பட்டால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை

நாமக்கல், டிச.1: ரேஷன் கடைகளில் போலி பில் கண்டறியப்பட்டால், விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இணைப்பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில், மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு, கடந்த அக்டோபர் மாதம் 208 விற்பனையாளர்கள் மற்றும் 22 கட்டுனர்கள் பணியில் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பு நேற்று நாமக்கல்லில் நடந்தது.

நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தலைமை வகித்து பேசியதாவது:
ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம், கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் விற்பனையாளர்கள் பணிக்கு வரவேண்டும். பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை, சரியான எடையில் விநியோகம் செய்ய வேண்டும். கடைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பொருட்களின் இருப்பு குறித்த தகவலை, பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், கடைகளில் இருப்பு பலகையை பராமரிக்க வேண்டும். ஒரு விற்பனையாளர் 2 ரேஷன் கடைகளை கவனித்து வந்தால், எந்த கடை எப்போது திறக்கப்படும் என்பது குறித்த விபரங்களை, பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். தகவல் பலகையில் அத்தியாவசிய பொருட்கள் வரவு, ஒதுக்கீடு, இறுதி இருப்பு ஆகியவற்றை தினமும் எழுதி வைக்க வேண்டும். அனைத்து வேலை நாட்களிலும், இருப்பில் உள்ள அனைத்து பொருட்களும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

தினசரி ஒரு பொருள் மட்டும் விநியோகம் செய்து, பொதுமக்களை அலைகழிக்க கூடாது. மண்ணெண்ணெய் வழங்கப்படும் நாள் விவரம் குறிப்பிட வேண்டும். விற்பனையாளர்கள் யாரும் குடிமை பொருட்கள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது. அது மாதிரி நடவடிக்கையில் ஈடுபடுவது தெரிய வந்தால், உடனடியாக உரிய விவரங்களுடன் கூட்டுறவு சார்பதிவாளர், துணைப்பதிவாளருக்கு தெரிவிக்க வேண்டும். ரேஷன் கடைகளில் போலி பில் மற்றும் சரக்கு இருப்பு அதிகம், சரக்கு இருப்பு குறைவு காணப்பட்டால், அவை கடுமையான குற்றங்களாக கருதப்படும். இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.

ரேஷன் கடைகளில் சம்பந்தப்பட்ட பணியாளர்களை தவிர, வெளிநபர்கள் இருந்தால், காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து, அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வெளி நபர்களை கடையில் அனுமதித்து, அவர்களுக்கு துணை போகும் ரேஷன் கடை விற்பனையாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்படையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, தங்கு தடை இன்றி அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் சேதம் ஏற்படாமல், இருக்க உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பனைவெல்லம், அரசு உப்பு, ஊட்டி டீ ஆகியவை அதிக அளவில் விற்பனை செய்ய வேண்டும். விற்பனையாளர்கள் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணியை, எந்தவித புகாருக்கும் இடமின்றி செய்வதன் மூலம், கூட்டுறவு துறைக்கு நல்ல பெயரை பெற்று தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில், கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் ரவிச்சந்திரன், பயிற்சி துணைப்பதிவாளர் பூர்விசா மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூரில் நடந்த பயிற்சி முகாமில், மண்டல இணைப்பதிவாளர் அருளரசு கலந்து கொண்டு, விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். ராசிபுரத்தில், துணைப்பதிவாளர் நாகராஜன் தலைமையில் பயிற்சி நடந்தது.

The post போலி பில் கண்டறியப்பட்டால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்தில் மாட்டிறைச்சி கொண்டு...