×

50 யானைகளை ஜவளகிரிக்கு விரட்ட வனத்துறையினர் தீவிரம்

தேன்கனிக்கோட்டை, டிச.1: தேன்கனிக்கோட்டை அருகே, தாவரகரையில் முகாமிட்டுள்ள 50 யானைகளை ஜவளகிரி வனத்திற்கு விரட்டும் பணியை, வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். கர்நாடக வனப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வந்த 50க்கும் மேற்பட்ட யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட நொகனூர் காப்புக்காட்டில் முகாமிட்டுள்ளன.

ஒரே நேரத்தில் அதிகளவிலான யானைகள் வந்துள்ளதால், அப்பகுதியில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து, அந்த யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க, தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் விஜயன் தலைமையிலான வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய 30க்கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், யானை கூட்டத்தை, ஜவளகிரி வனப்பகுதி வழியாக கர்நாடகா மாநிலத்திற்கு விரட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதையடுத்து, முதுமலையில் இருந்து 8 பேர் கொண்ட குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேன்கனிக்கோட்டை வனத்துறையினருடன் இணைந்து, எந்த அசம்பாவிதமும் இல்லாமல், யானைகளை விரட்டும் பணியை மேற்கொண்டுள்ளனர். மேலும், யானைகள் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால், அவற்றை கண்காணிக்க, வனத்துறையினர் ட்ரோன் கேமராவை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே, நேற்று காலை 50 யானைகளும் தாவரக்கரை வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அங்கிருந்து அந்த யானைகளை ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டும் நடவடிக்கையை வனத்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.

The post 50 யானைகளை ஜவளகிரிக்கு விரட்ட வனத்துறையினர் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Javalgiri ,Dhenkanikottai ,forest ,Thavarakarai ,Javalgiri forest ,Karnataka ,Dinakaran ,
× RELATED 20 யானைகளை ஜவளகிரிக்கு விரட்ட வனத்துறை தீவிரம்