×

மாநகராட்சி பகுதியில் ரூ.1.25 கோடி மதிப்பில் உயர்மட்ட கான்கிரீட் பாலம் அமைக்க முடிவு கலைஞர் நூற்றாண்டு நுழைவு வாயில்; மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

ஈரோடு, நவ.30: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை காரணமாக மொக்கையம்பாளையம் பகுதியில் குழாய் பாலம் அடித்து செல்லப்பட்டு நிலையில், ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட கான்கிரீட் பாலம் கட்டுவது என மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் மாநகராட்சி எல்லைகளில் கலைஞர் நூற்றாண்டு விழா நுழைவு வாயில் அமைக்க வலியுறுத்தப்பட்டது.

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று மாமன்றத்தின் சாதாரண கூட்டமும், அதைத்தொடர்ந்து அவசர கூட்டமும் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 21ம் தேதி பெய்த மழை காரணமாக 5வது வார்டுக்கு உட்பட்ட மொக்கையம்பாளையம் பகுதியில் உள்ள குழாய் பாலம் அடித்து செல்லப்பட்டு அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே, அந்த இடத்தில் குழாய் பாலத்தை அகற்றி விட்டு ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட கான்கிரீட் பாலம் கட்டுவது, 2ம் மண்டலத்திற்கு உட்பட்ட 8-வது வார்டில் சின்னசேமூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கும், தொடக்க பள்ளிக்கும் இடையே நீர்தேக்க தொட்டி மற்றும் சத்துணவு கூடம் பழுதடைந்து, அபாயகரமாக உள்ளது.

பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி பாதுகாப்பான முறையில் இடித்து அகற்றுவது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் தமிழ்நாடு முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் படி சுகாதார பணியாளர்கள் குறித்து விரிவான கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள, அப்பணிக்கான கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சிகள் வழங்குவதல், கணக்கெடுப்பை மதிப்பீடு செய்தல் மற்றும் கணக்கெடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரங்கள், சுவர் ஓவியங்கள், பதாகைகள், ஆடியோ அறிவிப்புகளை மாநகராட்சி பொது நிதியில் இருந்து மேற்கொள்வது, 4 மண்டலத்திலும் மொத்தம் உள்ள 67 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மற்றும் அவை தொடர்பான பகிர்மான குழாய் மூலம் குடிநீர் வழங்குதல் பணியை சுய உதவிக்குழு பணியாளர்களுக்கு மாற்றாக அவுட்சோர்சிங் மூலம் பணிகளை மேற்கொள்வது, அதேபோல 4 மண்டலங்களிலும் டெங்கு தடுப்பு பணிகளை அவுட் சோர்சிங் மூலம் மேற்கொள்ளவது என்பன உள்பட 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஜவுளி வணிக வளாகம் ஏலத்திற்கு சிறப்பு குழு: கனி மார்க்கெட் வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 3 தளங்களுடன் 294 கடைகளுடன் ரூ.51.59 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஜவுளி வணிக வளாகம், ஓராண்டுக்கு மேல் ஆகியும் பயன்பாட்டிற்கு வராமல் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளில் உள்ள நடைமுறைகளை பின்பற்றி பொது ஏல நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த வணிக வளாகத்தில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள நகரும் படிக்கட்டுகள், லிப்ட், ஜெனரேட்டர் ஆகியவற்றை பராமரிக்கவும, பிற அடிப்படை வசதிகளை பராமரிக்கவும் வாடகை மதிப்பினை அரசு வாடகை மதிப்பாக நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது.

ஏற்கனவே பொதுப்பணித்துறை கணக்கீடு செய்யப்பட்ட வாடகை மதிப்பு மற்றும் வழிகாட்டுதல் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்ட வாடகை மதிப்பினை விட குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகள் சங்கத்தினர் பொது ஏலம் தவிர்த்து முன்னுரிமை அடிப்பைடயில் ஒதுக்கீடு செய்து தர கோரியும், வைப்பு தொகை மற்றும் வாடகை மதிப்பினையும் குறைத்து தருமாறு கேட்டதன்பேரில் அதற்கான நடவடிக்கை எடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது, ‘‘ மாநகராட்சியில் 36-வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமார், ஜவுளி வணிக வளாகம் ஏலம் விடுவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிள் மற்றும் கவுன்சிலர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். அப்போது தான் முன்னுரிமை ஏலத்தில் நடக்கும் முறைகேடுகள் கண்டறியப்படும்’’ என தெரிவித்தார். இதையடுத்து ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி பதிலளித்து பேசுகையில், ‘‘ஜவுளி வணிக வளாக கடைகள் லிமிடட் டெண்டர், ஓபன் டெண்டர் என்ற முறையில் நடக்கும். லிமிடட் டெண்டர் ஏற்கனவே உள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நடக்கும். ஓபன் டெண்டர் பொதுவாக நடக்கும். ஜவுளி வணிக வளாகத்தின் வெளிப்புறத்தில் உள்ள கடைகள் அப்புறப்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரம் காக்க புதிய வணிக வளாகத்தில் கடைகள் ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்து தரப்படும். இந்த தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது முடிவு இல்லை. வணிக வளாகம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் பதில் அளிக்க வேண்டியது அவசியம். வணிக வளாகம் ஏலம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் 5 பேர், கவுன்சிலர்கள் 5 பேர் என்ற குழு அமைத்து, அந்த குழுவின் ஒப்புதலுடன் ஏலம் நடத்தப்படும்’’ என உறுதியளித்தார்.

கவுன்சிலர் சபுராமா ஜாபர் சாதிக் பேசுகையில், ‘‘ஜவுளி வணிக வளாகம் அமைந்துள்ள இடம் நகராட்சி தலைவராக செயல்பட்ட ஈகேஎம் அப்துல்கனி என்பவர் தானமாக வழங்கியதாக மாநகராட்சி கூட்ட பொருளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது அரசு பதிவு ஆவணங்களில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டும். மேலும், ஜவுளி வணிக வளாகம் அமைந்துள்ள இடம் பல ஆண்டுகளுக்கு முன் அரசு மருத்துவமனையாக செயல்பட்டது. இந்த இடத்திற்கு பெயர் பழைய மருத்துவமனை என்று தான் அழைத்தனர். அரசு ஆவணங்களில் ஈகேஎம் அப்துல்கனி தானமாக வழங்கியது குறிப்பிடப்பட்டிருந்தால் மகிழ்ச்சி தான்’’ என்றார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், ‘‘ஈரோடு மாநகராட்சி அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை பெரும் பிரச்சனை உள்ளது. அதில், ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக தீர்வு காண பணியாளர்கள் ஒத்துழைப்பது இல்லை. இப்பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும். பல பாதாள சாக்கடை மூடிகள் உடைந்துள்ளது. அதனை மாற்றி தர வேண்டும். காணப்படுகிறது. சேதமடைந்த தார் சாலைகள், கான்கிரீட் சாலைகள் புதிதாக அமைத்து தர வேண்டும். மாநகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. வெறி நாய்கள் சில பொதுமக்களை கடித்து வருகிறது. தெரு நாய்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடு, கோழிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் முறையாக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெரு மின் விளக்குகள் முறையாக எரிவதில்லை. கொசு மருந்துகள் டெங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் அடிக்காமல் அனைத்து பகுதிகளிலும் அடிக்க வேண்டும். சிறப்பு தூய்மை பணிகளை முக்கிய சாலைகளில் மட்டும் செய்யாமல், அனைத்து தெருக்களிலும் மேற்கொள்ள வேண்டும். குண்டும் குழியுமான சாலைகளை விரைந்து செப்பனிட வேண்டும். அனைத்து மண்டலங்களிலும் போதுமான அளவு தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும்’’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து பேசினர்.

இதையடுத்து இதற்கு பதிலளித்து ஆணையாளர் பேசுகையில், ‘‘பாதாள சாக்கடை பிரச்னைகளை தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். சேதம் அடைந்த பாதாள சாக்கடை மூடிகளை மொத்த கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். மாநகராட்சி பகுதியில் அனைத்து பகுதிகளிலும் விரைவாக தார் சாலை அமைத்து தரப்படும். ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்தில் பழைய நீர் தேக்க தொட்டிகளில் இருந்து புதிய நீர் தேக்க தொட்டிகளுக்கு இணைப்புகள் மாற்றி கொடுத்து, சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இந்த சோதனை நிறைவடைந்ததும் அனைத்து பகுதிகளிலும் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படும். தெரு நாய்கள் பிரச்சனைக்கு மாநில அளவில் அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி அப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்’’ என உறுதியளித்தார்.

கலைஞர் நூற்றாண்டு விழா நுழைவு வாயில்: ஈரோடு மாநகராட்சி 1ம் மண்டல தலைவர் பி.கே.பழனிசாமி பேசுகையில், ‘‘ஈரோடு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட திண்டல் மேட்டிலும், கருங்கல்பாளையம் காவேரி பாலம் அருகேயும் கலைஞர் நூற்றாண்டு விழா நுழைவு வாயில் (ஆர்ச்) அமைத்து தர வேண்டும்’’ என்றார். இதேபோல, கவுன்சிலர் கோகிலவாணி பேசுகையில், ‘‘கலைஞர் கருணாநிதி நகர் அருகே உள்ள முத்தம்பாளையம் பகுதி 7க்கு, தமிழ்நாடு முதல்வரின் பெயரான தளபதி ஸ்டாலின் நகர் என பெயர் வைக்க வேண்டும். இதே கோரிக்கையை கடந்த 5 மாதங்களுக்கு முன் மாமன்றத்தில் வைத்தேன். எனவே, இந்த கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து முதல்வர் பெயர் வைக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

மேலும் பொது மக்களின் புகார்களுக்கு தீர்வு காண குறை தீர்க்கும் மையம் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படும் திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம், சாலை பழுது மற்றும் தெரு விளக்கு தொடர்பாக புகார்களை பதிவு செய்ய மாநகர மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அந்த புகார்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் குறைதீர்க்கும் மையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. அந்த மையத்தை சமுதாய பொறுப்பு நிதி அல்லது மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்வது என சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

The post மாநகராட்சி பகுதியில் ரூ.1.25 கோடி மதிப்பில் உயர்மட்ட கான்கிரீட் பாலம் அமைக்க முடிவு கலைஞர் நூற்றாண்டு நுழைவு வாயில்; மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Erode ,Mokkayampalayam ,Erode Municipal Corporation ,Dinakaran ,
× RELATED விதிமீறல் விளம்பர தட்டிகள் அகற்றம்