அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின்கீழ் பயிற்சி முடித்தவர்களை அர்ச்சகராக நியமிக்க கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ‘உச்சநீதிமன்ற வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் வரை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின் கீழ் பயிற்சி முடித்தோரை நியமனம் செய்யக்கூடாது’ என ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்செந்தூர் சுப்ரமணியஸ்வாமி திருக்கோயில் சுதந்திர பரிபாலன ஸ்தலதார்கள் சபா நிர்வாகிகள் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில்,‘ அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின் மூலம் அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது. இதற்கிடையில் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை சார்பில் ஜூலை 27ல் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டப்படி பயிற்சி முடித்தவர்களை மூத்த அர்ச்சகர்கள் கீழ் பயிற்சி அர்ச்சகராக நியமனம் செய்வது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணைப்படி, திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டது சட்டவிரோதம் ஆகும். ஒரு வருட பயிற்சியில் வேதங்களை முழுமையாக கற்க முடியாது. முறையாகவும், முழுமையாகவும் கற்றிட 6 ஆண்டுகள் வரை ஆகும். மூத்த அர்ச்சகர் கீழ் பயிற்சி அர்ச்சகராக நியமனம் செய்யக்கூடியவருக்கு கோயில் நிதியிலிருந்து ரூ.8 ஆயிரம் சம்பளம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முறைப்படி ஆகம விதியை கற்றவர்கள் இருக்கும்போது இந்த நடைமுறை தேவையற்றது. எனவே, அரசாணை அடிப்படையில் இணை ஆணையர் வெளியிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.மதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘இதேபோன்றதொரு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இதில் உச்சநீதிமன்றம் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் வரை அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களுக்கு எந்தவிதமான பயிற்சி நியமனமும் வழங்கக் கூடாது. இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளார்.

The post அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின்கீழ் பயிற்சி முடித்தவர்களை அர்ச்சகராக நியமிக்க கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: