×

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ₹10.96 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு பயிர் கடன்: கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்

காஞ்சிபுரம், நவ. 30: காஞ்சிபுரத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ₹10.96 லட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் வேளாண் இடுப்பொருட்களை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலை துறை, கூட்டுறவு துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, பொதுப்பணி துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகளை விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும், விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

நேற்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், வேளாண்மை துறை சார்பில், 1 விவசாய பயனாளிக்கு தார்பாலினும், 2 விவசாய பயனாளிக்கு மானியத்தில் விசை தெளிப்பான்களும், 1 விவசாய பயனாளிக்கு மின்கலன் தெளிப்பான் வழங்கப்பட்டன. மேலும், 1 விவசாய பயனாளிக்கு மானியத்தில் நேரடி நெல் விதைப்பானும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், 4 விவசாய பயனாளிகளுக்கு காளான் குடில் பணி ஆணைகளும் மற்றும் சொட்டு நீர் பாசனம் பணி ஆணையினையும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் 6 விவசாய பயனாளிகளுக்கு ₹4 லட்சத்து, 6 ஆயிரத்து 522 மதிப்பீட்டில் பயிர்கடன்களும் வழங்கப்பட்டன.

மேலும், 6 விவசாய பயனாளிகளுக்கு ₹2 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடன்களும், 5 விவசாய பயனாளிகளுக்கு ₹1 லட்சத்து, 46 ஆயிரம் மதிப்பீட்டில் மீன் வியாபார கடன்களும் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெய, வேளாண்மை இணை இயக்குநர் பிரின்ஸ் கிளமென்ட், வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயகள் கலந்து கொண்டனர்.

The post விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ₹10.96 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு பயிர் கடன்: கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Collector ,Kalachelvi Mohan ,Farmers Grievance Redressal Day ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் 10 இடங்களில் கைத்தறி...