×

பார் மீது வெடிகுண்டு வீசிய 4 பேர் கைது ஏரியாவில் கெத்து காட்ட வெடிகுண்டு போட்டேன்

வில்லியனூர், நவ. 30: வில்லியனூர் காவல் நிலையத்துக்குட்பட்ட பங்கூர் பகுதியில் கடந்த 27ம் தேதி இரவு தனியார் பார் மீது ரவுடி ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுசம்பந்தமாக வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி கென்டியாங்குப்பம் ஆற்றுப்பகுதியில் பதுங்கி இருந்த செல்வா, விக்கி, அப்பு, அப்துல்கலாம் ஆகிய நான்கு பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பிறகு அவர்களிடம் விசாரணை நடத்தியபோது செல்வா அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்துள்ளார். தற்போது அந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த பெண் பின்னால் செல்வா சுற்றி வந்து காதலிப்பதாக தொல்லை கொடுத்துள்ளார்.

இதனை அறிந்த அந்த பெண்ணின் உறவினரான சபரி என்பவர் செல்வாவை கண்டித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அடித்துள்ளார். இதனால் செல்வா ஆத்திரம் அடைந்து சபரியை பழிவாங்க வேண்டும் என்றும் அவருக்கு தன்னுடைய கெத்தை காட்ட வேண்டும் என்றும் நினைத்தார். இதற்காக தனது கூட்டாளியான விக்கியை நாடியுள்ளார். அதன்பிறகு செல்வா, விக்கி, அப்பு, அப்துல்கலாம், சதீஷ் உட்பட 8 பேர் சேர்ந்து அரியூர் பகுதியில் ஒரு பட்டாசுக்கடையில் பட்டாசுக்களை வாங்கி வந்து கெண்டியாங்குப்பம் ஆற்றுப்பகுதிக்கு சென்று சதீஷ் தலைமையில் 3 நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துள்ளனர். அப்போது 2 வெடிகுண்டுகளை அங்கேயே வெடித்து சோதனை செய்துவிட்டு ஒரு வெடிகுண்டை மட்டும் செல்வா எடுத்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சபரி பங்கூரில் உள்ள தனியார் பாரில் மது அருந்த வந்துள்ளதாக செல்வாவுக்கு தகவல் கிடைத்தது. ஆகையால் அவரை மிரட்ட வேண்டும் என்றும் ஏரியாவில் கெத்தை காட்ட வேண்டும் என்றும் செல்வா பாரின் மீது வெடிகுண்டை வீசிவிட்டு சென்றதாக போலீசாரிடம் அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட செல்வா உள்ளிட்ட 4 பேரையும் வெடிகுண்டு தயாரித்த இடத்துக்கு அழைத்து சென்று தடயங்களை சேகரித்தனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்திய பால்ரஸ், நூல் உருண்டை, வெடிமருந்து ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சதீஷ் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

The post பார் மீது வெடிகுண்டு வீசிய 4 பேர் கைது ஏரியாவில் கெத்து காட்ட வெடிகுண்டு போட்டேன் appeared first on Dinakaran.

Tags : Willianur ,Bangur ,Dinakaran ,
× RELATED சினிமாபட பாணியில் துரத்தி பிடித்த...