×

கடலில் மூழ்கிய சரக்கு கப்பலுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும்

கடலூர், நவ. 30: கடலூரை சேர்ந்தவர் ராஜாமணி, சரக்கு பாய்மர கப்பல் உரிமையாளர். இவர் கடலூர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் கடந்த 2021ம் ஆண்டு புகார் மனு தாக்கல் செய்தார். அதில் ராஜாமணி, தனக்கு சொந்தமாக சரக்கு பாய்மரக் கப்பல் இயங்கி வந்தது எனவும், கடந்த 2021ம் ஆண்டு சரக்கு கப்பலுக்கு இன்சூரன்ஸ் பாலிசி தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் செலுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த 2021ம் ஆண்டு காலிகட் துறைமுகத்தில் இருந்து உரிய அனுமதி பெற்று ராஜாமணி தனக்கு சொந்தமான சரக்கு கப்பல், பல்வேறு வகையான பொருட்களுடன் மினி காய் துறைமுகத்துக்கு நோக்கி புறப்பட்ட நிலையில் வழியில் மோசமான வானிலை காரணமாக கேரள மாநிலம் மல்லாபுரம் கடற்கரையில் கப்பல் கரை ஒதுங்கியது. பின்னர் கப்பல் முற்றிலும் சிதைந்து சரக்குகளுடன் கடலில் மூழ்கியது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே 12 மாத காலத்திற்குப் பிறகு இன்சூரன்ஸ் நிறுவனம் தனது உரிமை கோரல் கடிதத்தை நிராகரித்ததாகவும், இதை தொடர்ந்து நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கடலூர் நுகர்வோர் நீதிமன்றம், ராஜாமணி தனது சரக்கு கப்பலுக்கு இன்சூரன்ஸ் தொகை செலுத்தி இருந்த நிலையில் விதிமுறைகள் மற்றும் கொள்கை நிபந்தனைகளை மீறவில்லை. எனவே இன்சூரன்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவிக்கும் செயல் தன்னிச்சையானது மற்றும் ஆதாரமற்றது.

எனவே ராஜாமணி தனது சரக்கு கப்பலுக்கு காப்பீட்டுச் செய்த மதிப்பீடு ரூ.1.65 கோடியை, 9 சதவீத வட்டியுடன் கோரிக்கை நிராகரித்த நாளியிலிருந்து செலுத்த வேண்டும். ராஜாமணிக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சேவை குறைபாடு தொடர்பாக இழப்பீடாக ரூ.ஒரு லட்சம் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும். மேலும் வழக்கு செலவு தொகையாக ரூ.10,000 செலுத்த வேண்டும் என கடலூர் நுகர்வோர் மன்ற நீதிபதி கோபிநாத், உறுப்பினர்கள் டாக்டர் பார்த்திபன், கலையரசி ஆகியோர் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட ராஜாமணி தரப்பில் வழக்கறிஞர் விஷ்ணு தாஸ் ஆஜரானார்.

The post கடலில் மூழ்கிய சரக்கு கப்பலுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Rajamani ,Grievance Redressal Forum ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி ஆணையரை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு