திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் மலை அடிவார பகுதிகளில் முகாம் தென்னை மரங்களை சாய்த்து யானைகள் அட்டகாசம்

*ரூ.3 லட்சம் மதிப்பு மரங்கள் சேதம்

*நிவாரணம் வழங்க கோரிக்கை

திருவில்லி/ராஜபாளையம் : திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் யானை கூட்டம் பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். ராஜபாளையம் அருகே ஒற்றை யானை ரூ.3 லட்சம் மதிப்புள்ள மரங்களை ஒடித்து சேதப்படுத்தி உள்ளது.

யானைகளை விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டங்களில் புகுந்து மாமரங்களையும் தென்னை மரங்களையும் யானைகள் சேதப்படுத்தி வருகின்றன வனப்பகுதி முழுவதும் சேரும் சகதியும் ஆக இருப்பதால் யானைகளை விரட்ட வனத்துறையினர் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் 100க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது மலை அடிவார பகுதியில் இறங்கி தோட்டங்களில் புகுந்து வாழை, தென்னை, மா, எலுமிச்சை போன்றவற்றை சேதப்படுத்தும். கடந்த மாதம் செண்பகத் தோப்பு பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து வாழை, தென்னை, மா மரங்களை சேதப்படுத்தியது. தொடர்ந்து சுமார் பத்து நாட்களுக்கு மேலாக இரவு நேரங்களில் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில் திருவில்லிபுத்தூர் ரெங்கர் கோவில் மற்றும் ரெங்கர் தீர்த்தம் ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக யானைகள் முகாமிட்டு தென்னை மற்றும் மா மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. யானைகள் கூட்டமாக இருப்பதால் அதிக அளவு மரங்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.கடந்த சில தினங்களாக தோட்டங்களில் புகுந்து யானைகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். யானைகளால் சேதமடைந்துள்ள பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள நச்சாடை பேரி கண்மாய் பாசனத்தில் 50க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளது. மா, தென்னை பிரதானமாக பயிரிடப்பட்டுள்ளது. சேத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பரமசிவம், ராமசுப்பிரமணியம், அம்மையப்பன், மூர்த்தி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் விவசாயம் செய்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக வனத்தில் இருந்து விவசாய பகுதிக்கு வரும் ஒற்றை காட்டு யானை தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வரட்டோடை, பங்களா காடு, உடும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை காட்டு யானை வேருடன் சாய்த்து சேதப்படுத்தி உள்ளது.
இதில் ஒரு மரம் மின்கம்பியில் விழுந்ததால் அங்கிருந்த 2 மின் கம்பங்களும் உடைந்து சேதமாகி விட்டது. இது குறித்து மின்வாரிய துறையினருக்கு விவசாயிகள் தகவல் அளித்ததும், உடனடியாக அந்த வழியாக மின்சாரத்தை துண்டித்து விட்டனர்.

னால் புகார் அளித்து 2 நாட்களாகியும் வனத்துறையினர் இதுவரை பார்வையிட கூட வரவில்லை என விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்தனர்.பல வருடங்களாக பராமரித்து வந்த மரங்கள் பலன் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில், யானையால் சேதமடைந்ததால் தங்களுக்கு ரூ.3 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், யானை விரட்டுவதால் உயிருக்கு பயந்து இரவில் காவலுக்கு வருவதில்லை எனவும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே சேதமான மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசும், வனப்பகுதியை சுற்றி அகழி வெட்டி வன விலங்குகள் விவசாய பகுதிக்குள் வருவதை தடுக்க வனத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மழை பெய்து வருவதால் விரட்டும் பணி பாதிப்பு

திருவில்லிபுத்தூரில் இரவு நேரங்களில் யானைகளை விரட்டுவதற்காக வனத்துறையினர் செல்ல முடியாத சூழல் உள்ளது. தொடர்ச்சியாக பெய்த மழையினால் யானைகளை விரட்ட செல்லும் பாதை முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் ஜீப்பில் சென்று விரட்ட முடியாத நிலை உள்ளது. ஜீப்பில் சென்றால் சக்கரம் பதிந்து கொள்ளும் சூழல் உள்ளதால் யானைகளை விரட்டுவதில் வனத்துறையினர் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனினும் பட்டாசுகளை வெடித்தும் தீப்பந்தங்களை ஏந்தியும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் மலை அடிவார பகுதிகளில் முகாம் தென்னை மரங்களை சாய்த்து யானைகள் அட்டகாசம் appeared first on Dinakaran.

Related Stories: