நாமக்கல், நவ.29: நாமக்கல் ஒன்றியத்தில் ₹1.35 கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை, திட்ட இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினார். நாமக்கல் மாவட்டத்தில், மொத்தம் 322 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சியில் ஒன்றிய, மாநில அரசுகளின் நிதி உதவிகளுடன், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. மாநில அரசின் சிறப்பு திட்டமான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ஊராட்சிகளில் பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும், 15வது நிதிக்குழு, தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டங்களிலும், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திட்டப்பணிகளை விரைவாக செய்து முடிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை கண்காணிக்க, நாமக்கல் மாவட்டத்துக்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர், ஒவ்வொரு மாதமும் நேரில் வந்து ஆய்வு செய்கிறார்.
இதையொட்டி, கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆகியோர் ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக சென்று, அங்கு நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்கின்றனர்.அதன்படி, நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வகுரம்பட்டி, வசந்தபுரம், சிவியாம்பாளையம், வீசானம் ஆகிய ஊராட்சிகளில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பிரதமரின் வீடு வழங்கும் திட்டப் பணிகள், முதல்வரின் கிராம சாலைகள் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ₹1.35 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. மேலும், துணை சுகாதார நிலையம் கட்டுதல், அங்கன்வாடி மையம் கட்டுதல், சமுதாய மயானம் அமைத்தல், கழிவறைகள்அமைத்தல், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகளை, நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், நேற்று அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். பணிகளை தரமாக மேற்கொள்ளும்படி அலுவலர்கள், ஒப்பந்தகாரர்களை அறிவுறுத்தினார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அவர் கேட்டுகொண்டார். வீசானத்தில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடியிருப்பு பணிகளை, டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என அவர் கேட்டுகொண்டார். இந்த ஆய்வின் போது, நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், தனம், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜாரகுமான், விஸ்வநாதன், கோபி மற்றும் உதவி பொறியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் உடனிருந்தனர்.
The post 4 ஊராட்சிகளில் ₹1.35 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் appeared first on Dinakaran.
