தெரியாம பண்ணிட்டேன்… மன்னிச்சுடுங்க… முதல்வர் ரங்கசாமியிடம் கதறி அழுத சந்திரபிரியங்கா: புதுச்சேரி அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பு?

புதுச்சேரி: புதுவை அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த சந்திரபிரியங்கா தனிப்பட்ட வாழ்க்கை பிரச்னை காரணமாக நீக்கப்பட்டார். இதையடுத்து, காரைக்கால் தொகுதியைச் சேர்ந்த மூன்று முறை எம்எல்ஏவான திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு, ராஜவேலு அண்ணன் மகன் லட்சுமிகாந்தன் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக பேசப்பட்டது. காரைக்கால் பிராந்தியத்தில் மொத்தம் உள்ள 5 தொகுதிகளில் சந்திர பிரியங்கா (நெடுங்காடு (தனி), திருமுருகன் (காரைக்கால் வடக்கு) ஆகியோர் மட்டுமே என்.ஆர்.காங்கிரசில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

அமைச்சர் பதவியை குறிவைத்து காரைக்கால் வடக்கு எம்.எல்.ஏ. திருமுருகன் புதுவைக்கு அடிக்கடி வந்துவிட்டு செல்கிறார். இந்த ரேசில் உள்ள துணை சபாநாயகர் ராஜவேலு, ‘தனக்கு இருதய ஆபரேஷன் செய்துள்ளதால் இனி வரும் தேர்தலில் நிற்கமாட்டேன். இதுவே இறுதி தேர்தல் அரசியல். எனவே இந்த முறை மட்டும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும்’ என ரங்கசாமியை தொடர்ந்து சந்தித்து வலியுறுத்தி வருகிறார். இதனால், ரங்கசாமி யாருக்கு கொடுப்பது என்று தெரியாமல் மவுனம் காத்து வருகிறார்.

அமைச்சரவையில் நீக்கத்துக்கு பிறகு தன் தொகுதி பணிகளை மட்டும் எம்எல்ஏ என்ற முறையில் சந்திர பிரியங்கா கவனித்து வந்தார். அமைச்சர் பதவி நீக்கத்துக்கு பிறகு அரசியல் ரீதியாக காரைக்காலில் அவருக்கான செல்வாக்கு சரிய ஆரம்பித்தது. மேலும் ரங்கசாமிக்கு எதிராக வீசிய புகார்கள், அவருக்கு எதிராகவே திரும்பிவிட்டது. இந்நிலையில், நேற்று மாலை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவரது வீட்டுக்கு திடீரென சென்றார். அப்போது, முதல் மாடியில் இருந்த முதல்வரிடம், தனிமையில் பேச வேண்டும் என தெரிவித்துள்ளார். உடனே அங்கிருந்த பணியாளர்கள் அனைவரையும் கீழே செல்லுமாறு முதல்வர் தெரிவித்துள்ளார். பின்னர் 30 நிமிடம் இருவரும் பேசினர்.

இதுகுறித்து முதல்வர் தரப்பில் கூறும்போது, ‘மாஜி பெண் அமைச்சர் முதல்வரை சந்தித்து, கதறி அழுதார். நான் தொடர்ந்து அரசியலில் நீடிக்க விரும்புகிறேன். தங்கள் மனது புண்படும்படி நடந்து கொண்டிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். தெரியாமல் செய்துவிட்டேன். என்னை ஒரு போதும் அரசியல் இருந்தே புறக்கணிக்காதீர்கள். தங்களின் ஆசியில் மீண்டும் மக்கள் பணிகளை செய்ய விரும்புகிறேன். எனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீங்கள் உதவ வேண்டும் என கதறி அழுதுள்ளார். அவர் கூறியதை அனைத்தையும் மவுனமாக கேட்டுக்கொண்ட ரங்கசாமி, பதில் ஏதும் தெரிவிக்கவில்லையாம். பின்னர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். உடனே நானே திரும்ப அழைக்கிறேன் திரும்ப வா என்று மட்டும் கூறினாராம் இவ்வாறு கூறப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தனது காரில் ஏறி சென்றுவிட்டார்’ என்று தெரிவித்து உள்ளனர்.

The post தெரியாம பண்ணிட்டேன்… மன்னிச்சுடுங்க… முதல்வர் ரங்கசாமியிடம் கதறி அழுத சந்திரபிரியங்கா: புதுச்சேரி அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பு? appeared first on Dinakaran.

Related Stories: