×

மாநகராட்சி 19-வது வார்டில் வெளியேற வழியின்றி தேங்கும் தண்ணீரால் பொதுமக்கள் அவதி

 

ஈரோடு, நவ.29: மழை நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்பதால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு, மாநகராட்சி 19-வது வார்டுக்கு உள்பட்டது வெட்டுக்காட்டு வலசு. நசியனூர் மெயின் ரோட்டில் உள்ள நல்லிதோட்டம் எதிரில் உள்ள விவேகானந்தர் சாலை பகுதியில், மடிகாரர் காலனி முதல் வீதியின் அருகில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள், பட்டறைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு உள்ளன. இப்பகுதியில், உள்ள பெரிய காலி இடத்தில் மழை நீர் வெளியேற வழியின்றி பெருமளவில் தேங்கியுள்ளது.

மழைக்காலங்கள் மட்டுமின்றி எப்போதும் இப்பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஆண்டுக்கணக்கில் நீடித்து வரும் இப்பிரச்னையால் இப்பகுதி குடியிருப்புவாசிகள் உள்ளிட்ட பலரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன. மேலும், நசியனூர் சாலையில் இருந்து இந்த வீதி பிரிந்து செல்லும் தொடக்க பகுதியில் இருந்தே வீதிக்குள் செல்ல முடியாமல் தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் தங்களது வீடுகளுக்கு செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

இதுதவிர, இப்பகுதியில் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. இதனால், அங்கு வரும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இங்கு ஆண்டுக்கணக்கில் தேங்கி நிற்கும் தண்ணீரால் கொசு உற்பத்தியாகி, அப்பகுதியில் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாநகராட்சி 19-வது வார்டில் வெளியேற வழியின்றி தேங்கும் தண்ணீரால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Erode ,
× RELATED சாலையில் ஜல்லி கற்கள்: அகற்றி சீர்செய்த போலீஸ்