சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த அதிமுக 47-வது வட்டச் செயலாளர் சந்திரசேகர் (49) கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை வைத்திநாதன் பாலம் அருகே மாவா, குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆர்.கே.நகர் போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர். தனிப்படை அமைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்ட போது, பாலசுப்பிரமணி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், கொருக்குப்பேட்டையை சேர்ந்த 47வது வார்டு அதிமுக வட்ட செயலாளர் சந்திரசேகர் என்பவர் மொத்தமாக வீட்டில் வைத்து மாவா, புகையிலை, குட்கா பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது. மூலப்பொருட்களான குட்கா, மாவா பொருட்களை அரைத்து அதனை பாக்கெட்டுகளாக தயார் செய்து ஒவ்வொரு கடைகளுக்கும் விற்பனை செய்து வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பள்ளி அருகே உள்ள கடைகள் மற்றும் டீக்கடை உள்ளிட்ட கடைகளிலும் குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதன் அடிப்படையில் ஆர்.கே.நகர் போலீசார், அதிமுக வட்டச்செயலாளர் சந்திரசேகர் மற்றும் பாலசுப்பிரமணி (37) மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 65 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதிமுக வட்ட செயலாளர் புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post சென்னை தண்டையார்பேட்டையில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த அதிமுக நிர்வாகி கைது; போலீசார் அதிரடி..!! appeared first on Dinakaran.
