பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதூர் வலசை கிராமத்தில் ஊருக்கு நடுவே கால்வாய் உள்ளது. வைகை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கால்வாய் முழுவதும் நிரம்பி பெருக்கெடுத்துச் செல்கிறது.இதனால் கால்வாயின் ஒருபுறம் உள்ள கிராம மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் விடுமுறை எடுத்து வீட்டிலேயே உள்ளனர். சில பெற்றோர், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை கால்வாய்க்கு குறுக்கே கயிறை கட்டி தோளில் சுமந்தும், ஆபத்தான நிலையில் கடந்து செல்கின்றனர். மேலும் அவசர தேவைக்காக கிராம மக்கள் கயிறு கட்டி ஆபத்தான முறையில் கால்வாயை கடந்து வருகின்றனர்.
கால்வாயின் ஒருபுறம் ராமநாதபுரம் மாவட்டமும், மற்றொரு புறம் சிவகங்கை மாவட்டத்தையும் சேர்ந்து இருப்பதால், கால்வாயின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கை காட்டி வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மழை காலங்களில் இதே நிலைமை நீடித்து வருவதால், கிராம மக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இரண்டு மாவட்ட நிர்வாகங்களும் முடிவெடுத்து கால்வாயின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
புதூர் வலசை கிராம மக்கள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் இதே நிலைதான் தொடர்கிறது. கால்வாயை கடக்க நாங்கள் திண்டாடும் நிலை உள்ளது.
கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. கால்வாயை கடக்க முடியாததால் எங்களது பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அவர்களது கல்வி பாதிக்கிறது. இதனால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட நிர்வாகங்கள் ஒரு முடிவு எடுத்து உடனே கால்வாய் பகுதியில் பாலம் கட்டி எங்களது துயரத்தை தீர்க்க வேண்டும்’’ என்றனர்.
The post எல்லைப் பிரச்னையால் தொடருது தொல்லை கால்வாயின் குறுக்கே கயிறு கட்டி ஆபத்தாக கடக்கும் கிராம மக்கள் appeared first on Dinakaran.
