சென்னை, கோவை உள்ளிட்ட 4 நகரங்களில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள்: ஜனவரி 19ம் தேதி தொடங்கும், 5 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பு

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நாட்டிலுள்ள இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஒன்றிய அரசின் சார்பில் நடத்தப்படுகின்றது. இந்த விளையாட்டு போட்டிகள் 17 மற்றும் 21 வயதுக்குட்பட்ட பிரிவுகளைக் கொண்டது. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் – 2023 தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் வரும் ஜனவரி 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த போட்டிகளில் 5000 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, வாள்வீச்சு, வாலிபால், பளு தூக்குதல், ஸ்குவாஷ், வில்வித்தை, ஜூடோ, கட்கா, டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், சைக்கிள் ஓட்டுதல், கோ-கோ, யோகாசனம், மல்யுத்தம், ஹாக்கி, நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், களரிபயட்டு, மல்லக்கம்பு, கூடைப்பந்து, தாங் தா, கபடி, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

அதேபோல், இந்த போட்டிகளில் கூடைப்பந்து, கபடி, கோ-கோ, வாலிபால், ஹாக்கி மற்றும் கால்பந்து ஆகியவற்றிற்கான குழு விளையாட்டுகளில் தமிழ்நாட்டு அணியும் இடம்பெற உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பயிற்சி அளிக்கப்படும். இதில் பங்கேற்பதற்குத் தகுதிபெற, விளையாட்டு வீரர்கள் ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட், பள்ளிக் கல்விச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் தேவை.

(குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு, மாநகராட்சி அல்லது கிராம பஞ்சாயத்து மூலம் ஜனவரி 1, 2013 அன்று அல்லது அதற்கு முன் வழங்கப்பட்டது). தகுதியுள்ள அனைத்து விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளும் தேர்வு சோதனைகளில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள். இவ்வாறு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை, கோவை உள்ளிட்ட 4 நகரங்களில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள்: ஜனவரி 19ம் தேதி தொடங்கும், 5 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: