தமிழகத்தில் நாளை நடக்க இருந்த பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு மீண்டும் ரத்து

சேலம்: தமிழகத்தில் நாளை நடக்க இருந்த உபரி பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு மீண்டும் ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், ஆண்டுதோறும் ஆசிரியர்கள் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில், உபரியாக கண்டறியப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

அதன்படி, 2023-2024ம் கல்வியாண்டிற்கு, கடந்த 01.08.2023ம் தேதி நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் ஆசிரியருடன் உபரி என கண்டறியப்பட்ட பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு, ஏற்கனவே கடந்த 20ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து அன்றைய தினம் கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டு, நாளை (27ம் தேதி) நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் பணிநிரவல் கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், `தமிழகத்தில் உபரி பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நாளை நடக்க இருந்தது. அனைத்து மாவட்டங்களிலும் உபரி ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனிடையே, மாணவர் நலன் கருதி கல்வியாண்டின் இடையே பணிநிரவல் கலந்தாய்வு நடத்த வேண்டாம் என பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், நாளை நடைபெற இருந்த பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வு நடக்கும் விவரம் விரைவில் தெரிவிக்கப்படும் என அனைத்து மாவட்ட சிஇஓக்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, என்றனர்.

The post தமிழகத்தில் நாளை நடக்க இருந்த பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு மீண்டும் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: