திருமலை : ஐதரபாத்தில் காரில் உறிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ₹5 கோடியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 2பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தெலங்கானா மாநிலத்தில் வரும் 30ம்தேதி சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி முக்கிய கட்சிகளின் தேசிய தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் அதிகாரிகள், போலீசார் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் விதிகளை மீறி, ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம், பரிசுப்பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஐதரபாத் கச்சிபௌலியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது வேகமாக வந்த காரினை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ₹5 கோடி பணம் கொண்டு சென்றது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவற்றினை பறிமுதல் செய்த போலீசார் காரில் கொண்டு சென்ற பெத்தப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post ஐதரபாத்தில் உறிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ₹5 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.
