மோடி குறித்து விமர்சனம் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: நாளை மாலைக்குள் பதிலளிக்க உத்தரவு

புதுடெல்லி: பிரதமர் மோடி குறித்த சர்ச்சை குறித்து விளக்கம் அளிக்கும்படி கேட்டு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல்களில் ம.பி., சட்டீஸ்கர், மிசோரம் ஆகியவற்றுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ராஜஸ்தானுக்கு நாளையும் தெலங்கானாவுக்கு வரும் 30ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் ராஜஸ்தான் மாநில தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், பிரதமர் மோடியை அதானிக்காக மக்களின் பாக்கெட்டுகளை கொள்ளை அடிப்பவர், பெரும் பணக்காரர்களின் கடனை தள்ளுபடி செய்தவர், துரதிருஷ்டமானவர் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி குறித்து ராகுல் அவதூறாக பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜ தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில், கடந்த 9 ஆண்டுகளில் தொழிலதிபர்களின் 14 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததாக கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது. மேலும், பிக்பாக்கெட் அடிப்பவர் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது மூத்த தலைவருக்கு தகுதியல்ல என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி குறித்த சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் கேட்டு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக நாளை மாலை 6 மணிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

 

The post மோடி குறித்து விமர்சனம் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: நாளை மாலைக்குள் பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: