×

பெண் உள்பட 2பேரிடம் ₹16.57 லட்சம் மோசடி

 

கிருஷ்ணகிரி, நவ.22: கிருஷ்ணகிரியில் கூடுதல் லாபம் கிடைக்கும் என ஏமாற்றி, தனியார் நிறுவன ஊழியர், இளம்பெண்ணிடம் ₹16.57 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளி சின்னகொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார்(28). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 5ம் தேதி இவரது வாட்ஸ் அப்பிற்கு போன் வந்தது. அதில் பேசிய மர்மநபர், பகுதிநேர வேலை இருப்பதாகவும், கூடுதல் லாபம் கிடைக்கும் எனவும், சிலவற்றிற்காக பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனை நம்பிய உதயகுமார், அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு, பல தவணைகளாக ₹5 லட்சத்து 37 ஆயிரம் அனுப்பி வைத்தார். ஆனால் எந்த வித லாபமும் கிடைக்கவில்லை. பின்னர் அந்த நம்பரை தொடர்பு கொண்டபோது, அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுபற்றி அவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.

இதேபோல் ஓசூர் பாகலூர் வஉசி நகரை சேர்ந்தவர் கிஷோர் லாயல். இவரது மனைவி பூர்ணிமா(29). கடந்த 6ம் தேதி இவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலை இருப்பதாகவும், கூடுதல் லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அதில் கொடுக்கப்பட்டிருந்த நம்பருக்கு போன் செய்து பூர்ணிமா பேசியுள்ளார். பின்னர் அவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு, தனது நகைகளை அடமானம் வைத்தும், பலரிடம் கடன் வாங்கியும், ₹11 லட்சத்து 20 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அதன்பின்னர் எந்த பதிலும் வரவில்லை. அந்த நம்பரை மீண்டும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தவர், இதுபற்றி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இந்த 2 புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண் உள்பட 2பேரிடம் ₹16.57 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,
× RELATED திராவிட பொங்கல் வாலிபால் போட்டி