நீட் விலக்கு மூலம் மாணவர்கள் உரிமையை திமுக காப்பாற்றும் இந்தியாவை காப்பாற்ற பாஜவை வீழ்த்த வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ஈரோடு: இந்தியாவை காப்பாற்ற பாசிச பாஜவை மக்கள் வீழ்த்த வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். ஈரோடு பெருந்துறை அடுத்த சரளை பகுதியில் ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக மூத்த முன்னோடிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட 2,580 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 2,580 பேருக்கு பொற்கிழி வழங்கி பேசியதாவது: 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அடிமைகளை வீட்டுக்கு அனுப்பினீர்கள். வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தியா என்ற ஒரு நாடு இருக்க வேண்டும் எனில் இந்தியா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற வேண்டும். இந்தியாவை காப்பாற்ற வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாசிச பாஜ அரசை மக்கள் வீழ்த்தி இந்தியாவை காப்பாற்ற வேண்டும். இதற்காக, திமுக தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்பதோடு மக்களிடம் இது தொடர்பாக பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் பெருந்துறை சரளையில் திமுக வடக்கு, தெற்கு மாவட்ட இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதுதான் நமது போராட்டத்திற்கு கிடைக்கும் வெற்றி. இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இங்கு வந்திருக்கும் அனைவரும் கொள்கை கூட்டமாக மாற வேண்டும். திமுக நடத்தும் நாடகம் என்று எடப்பாடி சொல்கிறார். நாடகத்தை பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா? நீங்கள் எப்படி முதல்வரானீர்கள்? தமிழக மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? உங்களுடன் இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் காலை வாரி விட்டீர்கள். சசிகலாவின் காலைப்பிடித்து முதல்வராகி, அதன் பிறகு அவருடைய காலையே வாரி விட்டவர்தான் எடப்பாடி. எனவே, எங்களுடைய நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும். மாணவர்கள் உரிமை மற்றும் தமிழ்நாட்டின் உரிமையை திமுக காப்பாற்றும். இவ்வாறு அமைச்சர் உதயநிதி பேசினார்.

 

The post நீட் விலக்கு மூலம் மாணவர்கள் உரிமையை திமுக காப்பாற்றும் இந்தியாவை காப்பாற்ற பாஜவை வீழ்த்த வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: