அபிராமி அந்தாதி: அறிந்தேன் எவரும் அறியா மறையை!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அபிராமி அந்தாதி- சக்தி தத்துவம்

``ஒன்றோடிரண்டு நயனங்களே’’

உலகியல் செல்வங்களையும், ஞானங்களையும், மோட்சத்தையும், வழங்க வல்ல ஆற்றல் உடையது உமையம்மையின் கண். அவளுக்கு மூன்று கண்கள் ஒவ்வொரு கண்ணும் ஒவ்வொரு தன்மையைப் பெற்றது. சூரியன், சந்திரன், நெருப்பு இவைகளை கண்களாகப் பெற்றவள் என்றாலும், அதை இங்கே குறிப்பிடவில்லை. அதை எப்படி உறுதி செய்வது என்றால், “ஒன்றோடு இரண்டு” என்ற எண்களால் குறிப்பிடுகிறார். இரண்டு கண்களையும், ஒருங்கே பெற்றவள் இலக்குமி. ஒரு கண்ணைச் சிறப்பாகப் பெற்றவள் பார்வதி. “ஒன்றோடிரண்டு நயனங்களே’’ என்பதனால் கருணை கூர்ந்து இரண்டு ஒத்த தன்மையை கொண்ட விழிகளையும் சிறப்புத் தன்மை கொண்ட ஒரு விழியையும் எடுத்துக் காட்டவே “ஒன்றோடிரண்டு நயனங்களே” என்கிறார்.

ஒத்த தன்மையுள்ள இரண்டு கண்களும் உலகியல் செல்வங்கள் அனைத்தையும் தரும். சிறப்பான ஒரு கண் அந்த செல்வத்தை எப்படிஅடைவது என்பதைப் பற்றி ஞானத்தைத் தரும். இதையே,

‘தனம்தரும்; கல்விதரும்; ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும்; தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம்தரும்; நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும்; பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே’ (69).

இவை எல்லாவற்றையும் அனுபவிப்பதற்காக. நீண்ட ஆயுளையும் தரும் ‘அந்தகன்பால் மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு’ (39) என்பதால் அறியலாம். ஞானத்தை அறிவிக்கும் சிறப்பான கண்ணை `தகை சேர்நயனக்கருணாம்புயமும்’ (58) என்பதனால் அறியலாம். நயனம் என்பது ஒருமையாகும். நயனங்கள் என்பது பன்மையாகும். இந்த பாடலில் நயனம் என்றே குறிப்பிடுகின்றார். `நயனங்கள் மூன்றுடை’ (74) என்று கூறப்படுவதால் இதை நுட்பமாக அறிந்துகொள்ள முடிகிறது. உலகில் வாழ்வு பெற உதவும் திரிபுரையின் நாமங்களைத்தான் “ஒன்றோடிரண்டு நயனங்களே” என்கிறார்.

“அந்தமாக”

“தாமம் கடம்பு; படை பஞ்ச பாணம்; தனுக் கரும்பு;” என்பதால் தந்திர சாத்திரத்தில் பயன்படும் பதினைந்திற்கும் மேற்பட்ட பொருளைக் குறிப்பிடுகின்றார்.

“யாமம் வைரவர் ஏத்தும் பொழுது” என்பதால் ஸ்ரீவித்யாவின் கிரியாசக்தி பைரவர் என்பதையும், இரவுநேர வழிபாடே உமையம்மைக்குச் சிறந்தது என்றும். “எமக்கென்று வைத்த சேமம் திருவடி’’ என்பதனால் உபாசாகன் ஒவ்வொருவருக்கும் உமையம்மை ஒரு தனி அடையாளமாகக் காட்சி அருள்வாய் அந்த வடிவம் தான் அவர்களுக்கு நன்மையைச் செய்து இறைஅருளை அனுபவச் சாத்தியப்படுத்தும். “செங்கைகள் நான்கொளி செம்மை அம்மை நாமம் திரிபுரை ஒன்றோடிரண்டு நயனங்களே” என்பதனால் புலன் இன்பங்களையும் அவற்றை பெரும்வழியையும், இவ்வுலக இன்பம் அனைத்தையும் அருளும் வடிவமே திரிபுரை என்று நமக்கு அறிவிக்கிறார் அதை அடைய முயல்வோம்.

அடுத்த பாடலாக;

நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும், நாரணனும்
அயனும் பரவும் அபிராம வல்லி அடியிணையைப்
பயனென்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும்பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே

– எழுபத்தி நான்காவது அந்தாதி…

“ஆதியாக”

இப்பாடலானது சாக்த தத்துவ நோக்கில் ஆன்ம கோட்பாட்டை வலியுறுத்துகிறது. அதை அறிந்து நோக்கினால் அன்றி இப்பாடலை சரிவர புரிந்துகொள்ள இயலாது எனவே இக்கோட்பாடுகளை முதலில் அறிந்து கொள்வோம். ஆன்மாவானது என்றும் உள்ளது. அது பல இயல்பாகவே அது அறியாமையால் சூழ்ந்து இருக்கிறது. ஆகையால் அது தன்னைத்தான் அறியாததாக இருக்கிறது. அந்த அறியாமையை விலக்குவது உமையம்மை ஒருத்தியைத் தவிர வேறு யாராலும் இயலாது. உமையம்மையே தன்னிடத்திலிருந்து பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் இவர்களைத் தோற்றுவித்து அறியாமையை போக்க வேதாகமத்தை தோற்றுவித்து அவற்றின் வழி ஆன்மாக்களுக்கு உடலைப் படைத்து, காத்து, அழித்து, மறைத்து, அருள்கிறாள்.

அந்த கருத்தை வலியுறுத்தும் வகையில் இப்பாடலானது அமைந்துள்ளது. இதை சகஸ்ரநாமம் புழு முதல் பிரம்மா வரை ஈன்றவள் என்பதை ‘ஆப்ரஹ்ம கீட ஜனன்யை’ என்பதனால் நன்கு அறியலாம்.மேலும் பிரம்மா, விஷ்ணு, ருத்ர, ஈஸ்வர, சதாசிவ என்ற சொல்லானது சாக்த தத்துவத்தைப் பொறுத்தவரை அரச மந்திரி, சேனாபதி, ஒற்றன் போன்ற சொற்கள் பதவியை குறிக்கும் அதுபோலவே, இந்த ஐவரையும் அறிந்துகொள்ள வேண்டும்.

உமையம்மையானவள் அண்டம் அனைத்திலும் உள்ள உயிர்களைக் காப்பதற்கு ஆங்காங்கு இந்த ஐந்து பதவிகளையும் உருவாக்கி அதற்கு உரியவர்களாய் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவனுக்கு அளித்துள்ளாள். சைவம் கூறும் பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் போன்றோர் இவர்கள் அல்ல. உமையம்மையால் உருவாக்கப்பட்ட இவர்கள் அதிகாரிகளே என்று பகுத்து உணர வேண்டும்.

இல்லையெனில் குழப்பம் ஏற்படும். அதை அபிராமிபட்டர் தெளிவாக குறிப்பிடுகிறார். மேலும், வேதம் என்ற சொல்லால் ஆன்மாவையும், ஆன்ம அறிவையும், ஆன்ம இலக்கணத்தையும், ரிக், யஜுர், சாம, அதர்வனம் என்ற எழுதாக் கிழவியான ஒலிப் பாடல்களையும் குறிப்பிடுகிறார். ஆன்மாவானது வெவ்வேறு உலகத்தில் வசிக்கும். அது வசிப்பதற்கு தகுந்த சரீரத்தைப் [உடல்] பெறும்.

அந்த உலகங்கள் பல உள. புவனம் பதினான்கையும் நரகம், சொர்க்கம், கைலாயம், வைகுண்டம் என்பனவாக உணர வேண்டும். இவையாவற்றையும் குறிப்பிடுகிறார். அந்தவகையில் பாவ புண்ணியத்தின் அடிப்படையிலேயே ஆன்மாக்கள் அந்தந்த உலகங்களுக்குச் செல்கின்றன. இந்த உலகங்களுக்கு மானுட ஆன்மாவானது செல்லும். அதில் துன்ப உலகத்திற்குச் செல்லாமல் இன்ப உலகத்திற்கு செல்வதற்கு இப்பொழுது நாம் வாழும் பூலோகத்தில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்று சில கொள்ள வேண்டிய தர்மங்களையும், தள்ள வேண்டிய அதர்மங்களையும் கூறுகிறார்.

அளவுக்கு அதிகமாக ஆசைப்படக் கூடாது அது நரகத்திற்கு வழிகாட்டும். அந்த விண்ணிலிருக்கும் செல்வம் என்பது என்ன? அதனால் புண்ணியம் செய்த உயிர்கள் பெறும் இன்பம் என்ன என்பதையே இப்பாடல் வரையறுக்கிறது. இனிப் பாடலுக்குள் நுழைவோம்.

“அந்தாதி பொருட்சொல் வரிசை”

நயனங்கள் மூன்றுடை நாதனும்
வேதமும்,
நாரணனும்
அயனும் பரவும்
அபிராம வல்லி அடியிணையை
பயனென்று கொண்டவர்
பாவையர் ஆடவும்
பாடவும்

பொன் சயனம் பொருந்து
தமனியக் காவினில்
தங்குவரே
இவ்வரிசையின் படி பாடலின் விளக்கதை இனி காண்போம்.

“நயனங்கள் மூன்றுடை நாதனும்”

இச்சொல்லால் மூன்று கண்களை உடைய ருத்ரனையே குறிப்பிடுகிறார். இந்த ருத்ரர் ஆன்மாக்களின் உடல் நீக்கிய பிறகு அவ்வான்மாக்களை அது செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப அந்தந்த உலகங்களுக்கு அழைத்து செல்லும் பணியைச் செய்பவர். தன் அடையாளத்தை இழந்த ஆன்மாக்களுக்கு அடுத்த உலகம் சென்று அங்கு தரப்படும் அடையாளத்தை அதாவது உடலைப் பெறும் வரையிலும் உடலைவிட்ட ஆன்மாக்கள் எந்த உலகத்தில் இருந்தனவோ அந்த வடிவத்தைத்தான் எடுத்துக்கொள்வர். தனக்குள் அந்த ஆன்மாக்களை இருக்கச் செய்வர். ருத்ரர்கள் தனக்கென்று தனி வடிவம் இல்லாதவர்கள் உதாரணத்திற்கு, நீரானது தான் இருக்கும் பாத்திரத்தின் வடிவத்தைப் பெறுவது போல, ருத்ரர்களும் இறந்த ஆன்மாக்களின்
வடிவத்தைப் பெறுகின்றனர்.

ருத்ரர்களுக்கு கண்ணானது மிகவும் சிறப்பு. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்று காலத்தையும் அறிய வல்லவர்கள். அதாவது இறந்த ஆன்மாவின் கடந்த கால நிலை, நிகழ்கால நிலை இவற்றின் வழி எதிர்கால நிலை என்ன என்பதை அறிய வல்லவர்கள் அதையே மூன்று கண்களாக குறிப்பிடுகின்றார். மேலும், “நயனங்கள்” என்ற சொல்லானது “நய” என்ற பகுதியில் இருந்து தோன்றியது, இது வடசொல் ஆகும். இதற்கு அழைத்துச் செல்வது என்பது பொருள். இறந்த ஆன்மாக்களை உறிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் ருத்ரர்களின் குணத்தைக் குறிப்பிடவே “நயனங்கள்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.

இன்றளவிலும் சைவர்கள் வழக்கில் இறந்த பதினோராவது நாள் விருஷோத்சர்ஜனம் என்ற பெயரில் இறந்த உடலின் ஆன்மாவை காளை மாட்டில் ஏற்றி கைலைக்கு அழைத்துச் செல்ல ருத்ரர்களை வேண்டுகின்றனர்.இதை அபிராமிபட்டர் `வெண் பகடூறும் பதம் தருமே’ (91) என்ற வரியால் குறிப்பிடுவதிலிருந்து, அறியலாம். மேலும், இந்த பெயரானது ருத்ரர்களை தவிர வேறு எந்த தேவதைகளையும் குறிக்காது என்பதையும் நன்கு அறிந்தே பட்டர், “நயனங்கள் மூன்றுடை நாதனும்’’ என்கிறார்.

இதை விஷ்ணு ஒருவரே புருஷோத்தமர், மகேஸ்வரன் ஒருவரே `த்ரியம்பகர்’ என அழைக்கப்படுவார். அதைப் போல, `சதக்ரது’ என்று என்னை மட்டுமே அழைக்க வேண்டும் என்ற இந்திரனின் வாக்கால் அறியலாம். இதை;

`ஹரிர்யதைக: புருஷோத்தம: ஸ்ம்ருதோ
மஹேச்வர ஸ்தரயம் பக ஏவநாபர:
ததா விதுர்மா முநய: சத: க்ரதும்
த்விதீய காமி நஹி சப்த ஏஷந:’

– என்பதனால் நன்கு உணரலாம்.

இந்த ருத்ரர்கள் உமையம்மையின் கருத்தையே தன் செயல்பாடாகக்கொண்டவர்கள். உமையம்மையின் கட்டளையை தலைமேல் கொண்டு அதை நிறைவேற்ற எப்பொழுதும் இயங்கிக் கொண்டே [நடந்து கொண்டே] இருப்பர். அதனால்தான், சிற்ப சாத்திரம் ருத்ரர்களின் திரு உருவத்தினை நடந்த
வடிவத்திலேயே அமைப்பர்.

திருவெண்காட்டில் அகோரமூர்த்தியின் வடிவம் இவ்வகையில் உள்ளதை இன்றும் காணலாம். அவர் பிரம்ம வித்யாம்பிகை இட்ட கட்டளைகளை நிறைவேற்றுகிறார். இந்த கருத்தையெல்லாம் மனதில் கொண்டே “நயனங்கள் மூன்றுடை நாதனும்’’ என்கிறார்.

“வேதமும்”

என்ற சொல்லானது அறிவது, அறிவிப்பது, அறிவு என்ற பொருளில் பயன்படுத்தப்படு கிறது என்பதை `வித்வேதனே’ என்ற வடமொழி வினையடியால் அறியலாம். அந்தவகையில் அறிவிப்பது என்பது உமையம்மையையே குறிக்கும். இதையே பட்டர் `நின்னை உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவு தந்தாய்’ (61) என்பதனால் அறியலாம். அறிவது அறிவை பெற்றுக்கொள்ளுகிற அறியாமையை நீக்கி கொள்ளுகிற பண்பை உடைய ஆன்மா இதையே `அறிந்தேன் எவரும் அறியா மறையை’ (3), ‘அறிவொன்றிலேன்’ (81) என்பதனால் அறியலாம்.

அறிவு என்பதனால் உமையம்மையின் அருளால் ஆன்மாக்களின் பொருட்டு சொல்லப்பட்ட ரிக், யஜுர், சாமம், அதர்வனம் என்ற வரி வடிவம் கொண்டு ஒலிப்பதையே முதன்மையாகக் கொண்ட ஆன்மாவையும் தேவதையையும் உலகையும் பற்றிய அறிவை விளக்கும் வண்ணம் அமைந்த வடமொழியில் உள்ள பாடல் தொகுப்பையே “வேதமும்” என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.

“வேதம்” என்பது உமையம்மையே. ஆண் வடிவமாக தோன்றும்போது விஷ்ணுவாக இருக்கிறாள். இதை `துயில் கூறும் விழுப்பொருளே’ (35) என்பதனால் அறியலாம். அந்த விஷ்ணுவைப் பற்றிக் குறிப்பிடுகிறபோது `யஸ்ய நிஸ்வாசோ வேத:’ யாருடைய மூச்சுக்காற்று வேதமாக உள்ளதோ என்பதனால் உமையம்மையின் ஆண் வடிவாகிய விஷ்ணுவின் மூச்சுக்காற்று வேதம். இது சாதாரண மனிதர் இயற்றிய நூல் போல் அல்ல என்பதை நாம் உணர வேண்டும்.

இந்த வேதமானது ஆறு கொண்டு அறிந்து கொள்ளப் பட வேண்டும். அந்த ஆறு அங்கங்களாகவும் உமையம்மை இருக்கிறாள். சிக்ஷா [ஒலிக்கும் முறை], வியாகரணம் [இலக்கணம்], சந்தஸ் [எழுத்தமைப்பு முறை], நிருக்தம் [பொருள் உணர்த்தும் முறை], ஜோதிஷம் [வேதத்தை ஓதும் காலம்] வேதம்சொல்லும் காலம் வேதத்தை உச்சரிக்கும் காலம் கல்பம் [வேதத்தில் சொல்லப்பட்ட விதிமுறைகள்] இந்த ஆறும் உமையம்மையையே.

ஒரு மனிதன் கருவிலே உற்பத்தியானது முதல் கைலாய பதவி அடைவது வரை உலகில் வாழ்விற்கு தேவையான அனைத்தையும் தரவல்லது. வாழ்க்கையின் அனைத்துத் துன்பங்களையும் போக்கவல்லது. வேதம் எண்ணிய அனைத்தையும் பெற்றுத் தரவல்லது வேதம். இந்த அனைத்தையும் பெற்றுத் தருவதற்கு உரிய வேத மந்திரத்தை ‘சாகா’ என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு வேதத்திற்கும் தனித்தனியாக பல சாகைகள் உள்ளன.

அவற்றில் ஒரு சாகையே மனிதனின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு சாகை என்பது வேதத்தின் சிறு பகுதியே இதை மனதில் கொண்டே அபிராமி பட்டர் ‘சுருதிகளின் பணையும்’ (2) என்கிறார். மேலும், வேதப்பொருளானது அறிவுக்கொள்கை செயற்கொள்கை என இரண்டாகப் பிரிக்கிறது. இதை கர்ம காண்டம், ஞான காண்டம் என்பர். அதில் கர்ம காண்டம் உலகியல் நலனையும் ஞானகாண்டம் மோட்சத்தையும் தரவல்லது இவையும் உமையம்மையின் வடிவம் என்கிறார் பட்டர்.

இதையே ‘பணையும் கொழுந்தும்’ (2) என்பதனால் அறியலாம்.இதை எல்லாம் மனதில்கொண்டே வேத மந்திரத்தையும் வைதீக சடங்குகளையும், வேள்விகளையும், அதன் வழி நமக்குக் கிடைக்கும். தேவதைகளின் அருளையும், ஆன்ம ஞானத்தையும் அதன் வழி கிடைக்கும் மோட்சத்தையும், அறியவேண்டிய ஆன்மாவையுமே வேதமும் என்கிறார். உடல் ஜடம் அது அறியும் தன்மை அற்றது.

உலகு ஜடம் அது அறிவிற்கும் தன்மையற்றது உலகைக்கொண்டு உயிர்களும் உமையம்மையே அறிவிக்கிறாள். அதனால், அறிவது என்பது ஆன்மாக்களே. அந்த ஆன்மாக்கள் அனைத்தும் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ள உமையம்மையையே வணங்கி நிற்கின்றன என்ற எல்லா கருத்தையும் மனதில்கொண்டே “வேதமும்” என்று குறிப்பிடுகின்றார்.

“நாரணனும்”

“நாரணன்” என்பவர் ஆன்மாக்களுக்கு ஞானம் வரும் வரை கொடுக்கப்பட்ட உடல் அழிந்துவிடாமல் ஞானத்திற்கு இடையூறு தரும் நோய் முதலியன யாக்கைக்குரிய பண்புகளால் ஆன்ம அறிவானது ஐயம், திரிபு, மித்யா என்ற பண்புகளால் பாதிக்கப்படும். அதாவது, ஞானத்தை அடையாது போவதற்கு வாய்ப்பு உள்ளது.

அதை காப்பதற்காக உமையம்மையை நாடி அவள் அருளைப்பெற்று ஆன்மாக்களின் உடல் கெடாமல் ஆன்ம ஞானம் பெற உதவும் வகையில் உடலையும் உள்ளத்தையும் காக்கும் தொழிலைச் செய்பவரே நாரணன் என்பதை ‘முராரி’ (97) என்பதனால் அறியலாம். இவர் என்ற உமையம்மையின் உதவியால் உயிர் உடல் தாங்குவதால் ஏற்படும் யாக்கையின் பதினெட்டு குற்றங்களிலிருந்தும் காப்பவர் இதை;

1. சுத் [பசி]
2. பிபாஷா [தாகம்]
3. மலம் [மலாம்]
4. தூக்கம் [ஜேஸ்டா]
5. வறுமை [அலக்ஷ்ம்]
6. அழிவு [நாசம்]
7. நான் உடல் என்னும் அறியாமை பண்பு [அகம்]
8. குறைந்த காலத்தில் மிகுதியாக அறியவோ அனுபவிக்கவோ இயலாமை [அபூதி]
9. வளமையின்மை [அஷமிருத்தி]
10. ஓரிடத்தில் குவிந்திருக்கும் பண்பு அனைத்து இடத்திலும் இல்லாமை உடல் சார்ந்த பண்பை அடைவது உயிரின் உண்மை இயல்பை அறியாமல் இருப்பது [நிர்னுதம்]
11. என்னுடையது என்ற மிகுந்த பற்றுடன் இருப்பது [மே]
12. உடல் சார்ந்த பண்பையே தன் இயல்பாக கொண்டது [கிருஹாது]

இவ்வாறான உடல் சார்ந்த அனைத்து தீங்கிலிருந்தும் காப்பவரையே நாரணன் என்கிறார்.உள்ளம் சார்ந்த ‘நக்ரோதோ நச மாத்ஸர்யம் ந லோபோ நா சுபாமதி: பவந்தி க்ருத புண்யனாம் பக்தனாம்  சுத்தம் ஜபேத் ஸதா’ அமைதியால் கோபமின்மையும், வாழ்த்துவதால் பொறாமையையும், தியாகத்தால் பற்றுதலையும், நல்ல எண்ணங்களால் தீய எண்ணங்களையும், நல்ல செயல்களில் ஈடுபாடும் தீய செயல்களில் மனத்தளர்வையும் போக்கி உள்ளத்தை காத்தருள்வது மகாவிஷ்ணு இவர் உமையம்மையின் ஆணைப்படி பல அவதாரங்களை எடுத்து அதோடு மக்களோடு மக்களாய் இணைந்து அவர்கள் முன்னேற்றம் அடைவதற்கு அவரவர்கள் வழிநின்று அறியாமையையும் அறிவையும் நன்கு அனுபவித்து உணர்ந்து மக்கள் அனைவருக்கும் நல்வழி காட்டுவதனால் நாராயணர் என்ற பெயரை பெற்றார் என்கிறது சாக்த தந்திரம்.

“நார” என்பதற்கு மனிதர்கள் உடலைப் பெற்ற உயிரினங்கள் என்றும் “அயன” என்பதற்கு ‘வழி’ என்று பொருள். “நாராயணன்” உயிர்களுக்கு நல்வழி காட்டுபவன். அந்த நாராயணனுக்கு அருள்பவள் நாராயணி. இதையே ‘நாயகி நாராயணி’ (50) என்பதனால் அறியலாம். இவை யாவற்றையும் மனதில் கொண்டே “நாரணனும்” என்ற சொல்லால் காத்தருள்வதைக் கூறுகிறார்.

தொகுப்பு: முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post அபிராமி அந்தாதி: அறிந்தேன் எவரும் அறியா மறையை! appeared first on Dinakaran.

Related Stories: