அதிமுக ஆட்சியில் பொது விநியோக திட்டத்தில் ரூ.350 கோடி முறைகேடு முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது விசாரணை நடந்து வருகிறது: ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு துறை தகவல்

சென்னை: அதிமுக ஆட்சியில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொருட்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு எதிரான புகாரில் விரிவான விசாரணை நடைபெற்றுவருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த காமராஜ் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பருப்பு எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த புகழேந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, புகார் குறித்து விரிவான விசாரணை நடைபெற்றுவருகிறது. 49 டெண்டர் ஆவணங்கள் 24 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ளதால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விசாரணைக்கு கால வரம்பு நிர்ணயிக்க முடியாது என்று தெரிவித்தார்.

அப்போது, அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் இதே முறையீடு தொடர்பாக தாங்களும் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இது குறித்து வழக்கு தொடரவுள்ளதாகவும் உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து வழக்கின் விசாரணையை நவம்பர் 22ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி அன்று இரண்டு வழக்குகள் தொடர்பாகவும் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

The post அதிமுக ஆட்சியில் பொது விநியோக திட்டத்தில் ரூ.350 கோடி முறைகேடு முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது விசாரணை நடந்து வருகிறது: ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: