கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர். மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி சமூகவிரோதிகள் வழிப்பறி, செல்போன் பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், நேற்று காலை பேருந்து நிலையத்தில் கோயம்பேடு துணை ஆணையர் உமையாள் தலைமையில் 250க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மோப்பநாய் உதவியுடன் பேருந்து நிலையம் முழுவதும் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு இன்று (நேற்று) முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், இதனை பயன்படுத்தி வழிப்பறி, செல்போன் பறிப்பு திருட்டு போன்ற குற்றச்சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற வாய்ப்புள்ளது. இவற்றை தடுக்கும் பொருட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் பேருந்தில் சிரமமின்றி செல்வதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். பயணிகள் கவனமாக இருப்பதற்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்து வருகிறோம். பேருந்து நிலையத்தில் சந்தேகப்படியான நபர்கள் சுற்றி வந்தால் பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்’’ என்றனர்.
The post தீபாவளி கொண்டாட சொந்த ஊர் பயணம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் வெள்ளம்: போலீசார் தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.
